06 Nov உதறித் தள்ளு..!
என்னடா ஆச்சு ஒனக்கு… சொல்லுடா… ஏண்டா இந்த முடிவெடுத்த..?
பிரசாத்தின் கேள்விக்கு வெறித்த பார்வை ஒன்றே பதிலாகக் கிடைத்தது.
லவ் ஃபெயிலியரா… யார்ட்டயும் ஏமாந்துட்டியாடா சந்தோஷ்..?
இல்லை என்பது போல் தலை அசைந்தது.
ட்ரக்ஸ், ட்ரிங்ஸ் ஏதாவது போட்டு ‘அடிக்ட்” ஆயிட்டியா..?
இல்லை என்பதைக் கண்ணால் சொன்னான்.
ஸ்டடி ப்ரஷர் தாங்காம… டார்கெட் முடிக்க முடியாம… தூக்க மாத்ரையப் போட்டுட்டியா..?
தலை கவிழ்ந்தது… கண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது… இல்லை என்பதே இதற்கும் பதில்.
ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி போல உயரமான, அழகான தன் நண்பன் இப்போது களையிழந்து, வீழ்ந்த மரம் போல் சோர்ந்து கிடந்தது பிரசாத்தை என்னவோ செய்தது.
பள்ளி முதல் கல்லூரியில் பி.எஸ்.ஸி கணிதம் வரை ஒன்றாய்ப் பயின்றவர்கள்.
“பைபிள் குவிஸு” சந்தோஷ என்றே அவனுக்குப் போ உண்டு ஆலயத்தில்.
நன்றாக ஜெபிப்பான்… புதுசா ஏதாவது செய்து பார்க்க, செய்து காட்ட ஆசைப்படுவான்!
ராஜ்யத்தின் மேன்மைக்காக பெரிய காரியங்களைக் கர்த்தர் அவன் மூலம் செய்வார் என எல்லோரும் வெளிப்படையாக எதிர்பார்த்தனர்.
பி.எஸ்.ஸி முடித்ததுமே campus placement-ல் வேலை கிடைத்து கோவை வந்து விட்டான் பிரசாத்.
சந்தோஷ் எம்.எஸ்.ஸி கணிதம் முடித்து, பி. ஹெச். டி ஆய்வு மாணவனாகவும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டான்.
இந்த நான்கு வருட இடைவெளி நண்பர்கள் நடுவிலும் இடைவெளியை உண்டாக்கியது உண்மைதான்.
போன வாரம் சந்தோஷ் அப்பா திடீரென போன் செய்தார். பிரசாத் முடிஞ்சா ரெண்டு நாள் லீவு போட்டுட்டு கும்பகோணம் வர முடியுமா? சந்தோஷ் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டான்…
வெலவெலத்துப் போனான் பிரசாத்… கலகலப்பான ஆரவாரமான சந்தோஷ் தற்கொலை செய்ய முயன்றானா..? கம்பெனியில் நான்கு நாள் லீவு கேட்டு வாங்கினான். கிடைத்த பஸ்ஸில் ஏறி காலையில் சந்தோஷ் வீட்டில் நின்றான்.
சொல்லு சந்தோஷ்… நா ஒன் Close Friend… என்ட்ட சொல்லாம, காட்டாம ஒரு Shirt, Pant, Bike, Laptop எதுவும் வாங்க மாட்டியேடா… எப்டிடா என்ன மறந்த..? பேசும் போதே பிரசாத் அழுது விட்டான்.
தப்பு பண்ணிட்டேண்டா பிரசாத்… ஒங்க எல்லாரையும் ஏமாத்தி… நல்லவன் மாதிரி நடிச்சு… நம்ப வச்சேன்… நா… உண்மைல… ஒரு சாக்கடைடா… குமுறி அழுதான் சந்தோஷ்.
பரவால்லடா… என்ன நம்பி சொல்லலாம்னு நீ நெனச்சா ஷேர் பண்ணுடா… ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கத்தான ஆண்டவர் சொல்லித் தந்திருக்காங்க…
நா சொல்றதக் கேட்டா என்னை நீ மன்னிப்பியா பிரசாத்?
டேய்… ஏண்டா பெரிய வார்த்தை சொல்ற… ஆண்டவர் மன்னிக்க முடியாத பெரிய பாவம் எதுவுமே இல்ல உலகத்துல… நா ஒன்ன நேசிக்கறண்டா… அப்பா போன் பண்ணுனதும் எல்லாத்தையும் போட்டுட்டு ஓடி வந்திருக்கண்டா.
பிரசாத்… பல வருஷமா ஃபோர்னோகிராபி அடிக்டா இருக்கேண்டா… வௌயாட்டு மாதிரி என்னதான் அப்பிடி இருக்கு அந்த சைட்லனு வேடிக்கை பாக்கப் போயி… ஆழங்காண முடியாத ஒரு கெணருல கீழ… கீழ… போய்க்கிட்டே இருக்கேண்டா…
ஆண்டவர் பல முறை பேசினார்… எச்சரிச்சார்… என்னால அந்த சாக்கடையில் இருந்து மேல வர முடியல… எதிர் பாலர பரிசுத்தமா பாக்க முடியல… யாரும் இல்லாதப்ப… பாக்க ஆரம்பிக்க நான்… இப்ப யாரும் வேணாம்… அது போதும்னு நெனக்க ஆரம்பிச்சுட்டேன்…
ஒரு ஸ்டேஜில எனக்கே என் மேல கோபம், அருவருப்பு… இந்த ரெட்ட வேஷம் புடிக்கல… யார்ட்டயும் சொல்ல பயம்… கடைசியா இந்த ஒடம்புல உயிர் இருக்கறதுலதான இந்தப் போராட்டம்.
.. உசுரையே மாச்சுக்கிட்டா நான் நடுவுல கெடந்து திண்டாட வேண்டாம்னு முடிவு பண்ணுனேன். கேவிக் கேவி அடி வாங்கிய சிறுபிள்ளை போல் அழுதான் சந்தோஷ்.
இரக்கத்தோடு அவனையே பார்த்தான் பிரசாத். தப்புப் பண்ணிட்டனே ஆண்டவரே.., சந்தோஷ் என்ன விட்டு வெலகுறான்னு தெரிய ஆரம்பிச்சப்ப அத அசால்ட்டா எடுத்துக்கிட்டேனே… பிரசாத் வருந்தினான்.
சந்தோஷை அணைத்துக் கொண்டான். நான் சொல்றதைக் கேளுடா… ப்ளீஸ்… பைபிள் சொல்லுது அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தொழுது, ஸ்தோத்தரியாமல் போனதால்தான் சிந்தனையில் வீணரானார்கள்!
கண்களின் இச்சை எந்த ரூபத்திலயும் நம்ம கவிழ்த்துப் போட வரும்…
ஆண்டவரே, நான் பாவம் செஞ்சேன், என்னை மன்னியுங்கன்னு மனப்பூர்வமா அறிக்கை செய். தவறுக்காக மனம் வருந்தி அறிக்கையிட்ட தாவீதை தேவன் ஏத்துக்கலயா…?
இனிப் பாவம் செய்யாதேன்னுதான, கையும் களவுமா பிடிபட்ட விபசார ஸ்திரியிடம் சொன்னாங்க இயேசு சுவாமி.
நீ சொன்ன மாதிரி இது ஒரு பாலுறவுப் பாவம். ஒருவகையில அடிமைத்தனம்தான்… ஆனா ஆவியானவர் எங்கேயோ அங்க விடுதலை உண்டுன்னு வசனம் சொல்லுதே… எங்கிட்ட வர்ர யாரையும் நான் புறம்பே தள்மாட்டேன்னு ஆண்டவர் ப்ராமிஸ் பண்றாரு…
தனியா நீ இருக்கற நேரத்தை மொதல்ல அவாய்டு பண்ணு.
லாப் டாப், இன்டர்நெட், பேஸ்புக் தொல்லையா இருக்கும்னா ஒரு மாசம் அதை விட்டு விலகி இரு.
தூங்கற நேரம் தவிர எப்பவும் யாராவது ஒருத்தரோடு இருக்கற மாதிரி பாத்துக்க…
கிறிஸ்துக்குள் ஒருவன் இருந்தால் அவன் புது சிருஷ்டின்னு வசனம் சொல்லுது. புது ஆசை… புது நம்பிக்கை… புது உறவுகள் ஆண்டவர் தருவார்… மேலானதைத் தேடுவோம்…
எல்லாவற்றுக்கும் குழந்தை போல் தலையசைத்தான் சந்தோஷ்.
நா சொன்னதை… சந்தோஷ் இழுத்தான்.
கடவுள் முன்னால நீ எங்கிட்ட சொன்னது என்னோடு நிக்கும். ஆனா சரியானது எதுன்னா உன்ன நேசிக்கறவுங்களுக்கு இந்த உண்மை தெரியனும்… அப்ப உன்னை இன்னும் பாதுகாக்க அவங்க உதவுவாங்க..!
பரவால்ல இந்த நாலு நாள் நான் ஒன்னோட இருப்பேன். அடுத்த ரெண்டு வாரம் காருண்யா யுனிவர்சிட்டில ஒரு Spiritual Empowerment Workshop நடக்குது. ஒன்னக் கேட்காமலேயே நான் உம்பேரை ரெஜிஸ்டர் பண்ணிடேன் நேத்து. அர்னால்டு அண்ணா… உன்கூட ரூம் ஷேர் பண்ணுவாங்க. ஒரு இட மாற்றம் –அதுவும் தேவனோட ஒப்புறவாகுறதுக்கு, பலப்படுறதுக்கு – இந்த மாதிரி சூழல் தற்சமயம் ஒனக்கு அவசியம் தேவை. போலாம்தான சந்தோஷ்.
ஆம் என்று தலையசைத்தான். நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் சந்தோஷ் முகத்தை வெளிச்சமாக்கின
நன்றி : தரிசனச்சுடர்
No Comments