
17 May கிரிக்கெட்டும்… கல்லூரியும்…
அன்புத் தம்பீ,
உன் மின்னஞ்சல் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நல்ல மதிப்பெண்கள் பெற்றதற்கு என் வாழ்த்துக்கள். மேனிலைப்பள்ளி முகாமில் நீ என்னுடன் பகிர்ந்துகொண்ட உன் எதிர்கால விருப்பங்கள் என் நினைவில் இருக்கின்றன. நீ விரும்பியபடியே கலந்தாய்வில் நல்ல கல்லூரியில் உனக்கு BE (Civil) கிடைக்க தொடர்ந்து இறைவேண்டல் செய்வேன். முதல் முறையாக வீட்டை விட்டு வெளியேறி கல்லூரிக்குள் பல கனவுகளுடன் நுழைய இருக்கிறாய். உனக்கு சில விஷயங்களை முன்வைக்கிறேன்.
கிரிக்கெட் நாம் மிக விரும்பி ரசிக்கும் ஒரு விளையாட்டுதானே. கல்லூரி வாழ்க்கையும் கிரிக்கெட் போலத்தான் தம்பீ. சிறந்த பேட்ஸ்மேன் களத்தில் விளையாட இறங்குமுன் ஆடுகளத்தின் (பிட்ச்) தன்மையை அறிந்து கொள்வான். பந்து எப்படி எழும்பும், களம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமானதா அல்லது வேகப்பந்து வீச்சு எடுபடுமா என்று அறிந்து கொள்வான்.
கல்லூரி வாழ்க்கையும் ஒரு விளையாட்டுக் களம்தான். கல்லூரியில் சாதித்து மெடல் வாங்கியவர்களும் உண்டு. படிப்போடு வாழ்க்கை யையும் தொலைத்துவிட்டு தெருவில் நிற்பவர்களும் உண்டு… கிரிக்கெட் மைதானம் சென்று கல்லூரி ஆட்டத்தை எப்படி ஆடுவது என சிந்திப்போம்.
எதிரணி (Opponent Team) – பிசாசின் சேனை
பிசாசின் சதித்திட்டங்கள் வளாகத்தில் நம் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. ஏனெனில் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் நாம் போராடப் போவதில்லை. மனிதர்கள் நம் நண்பர்கள். ஆண்டவரின் படைப்புகள். அவர்களிடம் அன்புகாட்ட இயேசு நமக்குக் கட்டளை தந்துள்ளார். ஆனால் வஞ்சக பிசாசின் சேனையை (தீய சிந்தை, நோக்கம். பாவப் பழக்க வழக்கங்கள்) எதிர்த்து நாம் (எபேசியர் 6:13) மோதப் போகிறோம். நாம் பாவத்தில் தடுமாறினால், நம்மைக் குற்றப்படுத்த எதிரணியினர் காத்திருக்கின்றனர். பேட்ஸ்மேன் முழு உடல்கவசம் அணிந்து களம் இறங்குகிறான். நீ கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் போது சர்வாயுதவர்க்கம் அணிந்து களமிறங்கு (எபே. 6:13-18).
பயிற்சியாளர் (Coach) -பரிசுத்த ஆவியானவர்)
சாமர்த்தியமாக சோதனை பந்துகளைச் சந்தித்து விளையாட நமது பயிற்சியாளர் இயேசு எப்போதும் நமக்குத் துணை செய்கிறார். அவர் நம்மை யுத்தத்திற்குப் பழக்குவிப்பவர் (சங். 144:1). எல்லாச் சூழ்நிலைகளிலும் நமக்குத் தேவையான ஆலோசனைகளைத் தந்துகொண்டே இருப்பார்.
வேக பந்து வீச்சு (Fast Ball)
ஒருவன் பந்து வீச. பத்துப்பேர் உன்னை வீழ்த்தக் காத்திருப்பார்கள். இதுதான் கிரிக்கெட். சிறந்த பேட்ஸ்மேன் வேகப்பந்துகளை அவசரப்பட்டு அடிப்பதில்லை. பொறுமையாக சில பந்துகளைக் கணித்தபின் அடிக்க ஆரம்பிக்கிறான். பின் நான்கு மற்றும் ஆறு ரன்கள் எளிதாக எடுப்பான். கல்லூரி ஆரம்ப நாட்கள் உன்னை சோர்வடையச் செய்யலாம். புது இடம், படிப்பில் அபத்தம், சீனியர் மாணவர்கள் தரக்கூடிய சிரமங்கள். வீட்டு நினைவுகள் உன்னை நெருக்கும். உன்னை நோக்கி வரும் வேகப்பந்துகள் பற்றி மன அழுத்தம் அடையாதே: பொறுமை. நிதானம் தேவன் தருவார். அவர் உன்மேல் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை தரும் தேவன் (சங். 32:8). உடன் பேட்ஸ்மேன் ஆக இன்னொரு முனையில் ஆடும் நல் விசுவாச நண்பர்களின் ஐக்கியத்தைத் தேடிச் சென்று கலந்து பேசி உன்னைக் காத்துக்கொள்.
சுழற்பந்து வீச்சு (Spin Bowling)
சுழற்பந்து விளையாட எளிதுபோல் தோன்றலாம். முன்னால் இறங்கி அடித்து சிக்சர் எடுக்க ஆசை காட்டும். ஆனால் அடித்தவுடன் திசை மாறி ஃபீல்டர் கையில் சிக்கி, நம்மை வெளியேற்றிவிடும். கடினமானசூழ்நிலைகளை மேற்கொண்ட நீ இப்போது நிம்மதி அடையலாம். சீனியர் தொந்தரவு இல்லை; பாடங்கள், விடுதி, மாணவர்கள் செட் ஆகிவிட்டனர். நல்லதுதான். ஆனால் புது நட்புகள் சில புதுப் பழக்கங்களுக்கு உன்னை அழைக்கலாம். “புகைத்துப்பார்: மதுவின் ருசியைக் கொஞ்சம் அருந்திப்பார்” என புது உலகம் உன்னை ஈர்க்க நினைக்கும். கம்பெனி கொடுக்க கொஞ்சம் எடுத்துக்கொண்டால் தவறில்லை எனச் சிலர் கூறலாம். ஆனால் தம்பீ… அது ஒரு சுழல். உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக வலையில் சிக்கவைத்து. உன் உடல், உள்ளம், குணம். படிப்பு என எல்லாவற்றையுமே சீரழித்துவிடும். சிந்தித்துப்பார்! (நீதி. 20:1; 23:31,32). இப்படிப்பட்ட நண்பர்களைக் கழற்றி விடுவது நல்லது. வசனத்தில் உன் உள்ளம் உறுதியாக இருந்தால். சுழல் பந்துகளை சிக்சர் ஆக மாற்றலாம்.
சாதனை சிகரம் நோக்கி…
எண்பது ரன்களைத் தாண்டும்போது பேட்ஸ்மேன் களைத்துப் போகிறான். 100 எடுத்து சாதனை புரிய, அவன் கண்கள் பந்தின் மீது மட்டுமே பதிந்து இருக்க வேண்டும். நீ எடுத்துக்கொண்ட அந்தப் பொறியியல் பாடங்களின் வித்தைகளைக் கற்றுக்கொள்வதில் உனக்கு முழுக் கவனம் வேவை. படிப்பில் சாதிக்க கடின உழைப்பு தேவை. எறும்பு போல சுறுசுறுப்புடன் செயல்பட சாலொமோன் ஞானி அறிவுறுத்துகிறார் (நீதி. 6:6-10). ஒரு பேட்ஸ்மேனின் சாதனைக்குப் பின்னால் ஒரு முழு டீம் இருக்கிறது. உன் துறையில் சாதித்த உடன் மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைவருடனும் நல்லுறவை வளர்த்துக்கொள்வது அவசியம்.
நான்காண்டுகள் கழித்து நீ கல்லூரியை விட்டு வெளியேறும் போது, சாதனை படைத்து வெற்றியோடு வரவேண்டும். பயிற்சியாளரின் வழிகாட்டலில் பேட்ஸ்மேன் சாதிக்கிறான். இறைவார்த்தைகளின் அஸ்தி பாரத்தில், பரிசுத்த ஆவியானவரின் துணையோடு நீ செயல்படும்போது. தேவ திட்டம் உன் வாழ்வில் நிச்சயமாக நிறைவேறும்.
இப்போதிருந்தே நீ ஜெபித்து உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்.
என்றும் அன்புடன்
உன் அண்ணன்
No Comments