
05 Sep சமயம் வாய்க்காவிட்டாலும்…
என்ன ரகு… ஒரு வாரம் ஆளையே காணோம். டியூஷனுக்கு வந்த ரகுராமனைப் பார்த்து, டியூஷன் மாஸ்டரின் கேள்வி உட்காரப்போன ரகுராமனை நிறுத்தியது. மிகவும் சோர்வான முகத்துடன் இருந்த ரகுராமன். சாரி சார். எனக்கு உடல் நிலை சரியில்லை. ஸ்கூலுக்கும் போகவில்லை சார் என்றான். சரி சரி, உட்கார் என்று சொல்லிவிட்டுப் பாடங்களை நடத்த ஆரம் பித்தார் டியூஷன் மாஸ்டர் பிரவீன்.
ரகுராமன் அரசு பள்ளியில் +2 படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். நன்றாகப் படிப்பான். டியூஷன் மாஸ்டர் பிரவீன் ஓர் இரட்சிக்கப்பட்ட கர்த்தருடைய தாசன். அதே ஊரில் ஒரு பிரைவேட் ஸ்கூலில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ரகுராமன் மிகவும் கஷ்டப்படுகிற குடும்பம் என்பதால் பிரவீன் அவன் மீது இரக்கம் வைத்து, இலவசமாக அவனுக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்.
பாடங்களை நடத்திக்கொண்டிருந்த பிரவீனின் இதயத்தில் திடீரென்று ஆண்டவரின் சத்தம் தெளிவாகக் கேட்டது. பிரவீன் ரகுவுக்கு இயேசுவைப் பற்றிச் சொல் என்று. ஒரு கணம் திகைத்த பிரவீன் சரி இன்றைக்கு ரகுவுக்கும். மற்ற பிள்ளைகளுக்கும் இயேசுவைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார். அதற்குள் இன்னொரு மாணவர். சார் இந்த ஃபோர்த் சேப்ட்டர்ல. மூணாவது கணக்கு ஒன்னுமே புரியல. இத சொல்லித்தாங்க சார். இன்றைக்கு டெஸ்ட் வேற இருக்கிறது என்றான். சரி என்று சொல்லி விட்டு அவனுக்கு அந்தக் கணக்கை நடத்த ஆரம்பித்தார் பிரவீன்.
இப்படியாக அந்த நாள் டியூஷன் முடிந்தது. ஒவ்வொரு நாளும் இயேசுவைப் பற்றி பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியாமல் போனது. நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தன.
பிரவீன் ஞாயிறு மாலை தோறும் சபையாரோடு சேர்ந்து அருகிலிருக்கும் கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப் போவதுண்டு. அந்த வாரம் ஞாயிறு மாலை வழக்கம்போல் அருகில் இருந்த கிராமத்திற்கு சுவிசேஷம் அறிவிக்கப் போனார் பிரவீன். எதேச்சையாக அது ரகுவின் ஊராக இருந்தது. ரகுராமன் ஒரு வாரமாக டியூஷனுக்கு வரவில்லை. அவனைப் பார்த்து இயேசுவைப் பற்றி சொல்லி ஒரு ஜெபமும் செய்துவிட்டு வரலாம் என்று நினைத்த பிரவீன். சைக்கிள் டயரில் வண்டி ஓட்டிக்கொண்டு ஓடிவந்த ஒரு சிறுவனைத் தடுத்து நிறுத்தினார். தம்பி. இங்கே வாயேன். ரகுராமன் வீடு எங்கே? கொஞ்சம் சொல்லேன் என்றார்.
“அதோ பந்தல் போட்டிருக்கிறதே கடைசி வீடு: அதுதான் சார் ரகு அண்ணன் வீடு. அவர் மூணு நாளைக்கி முன்னாடிதான் சார் இறந்தாரு. ஒடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு நிற்காமல் ஓடினான் அச்சிறுவன். இதைக் கேட்டதும் இதயம் ஒருகணம் நின்று துடித்தது பிரவீனுக்கு. ஐயோ. ரகுவுக்கு இயேசுவைச் சொல்லாமல் விட்டுவிட்டோமே! இப்போது அவன் இறந்து போய்விட்டானே!
இனிமேலாவது இயேசுவை அறிவிக்க தாமதிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் திரும்பினார் பிரவீன்.
சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் திருவசனத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம்பண்ணு (2 தீமோ. 4:2) என்கிற வசனம் பிரவீனைச் சுற்றிச் சுற்றி வந்தது
– திருமதி. ஸ்டெல்லா தேவஇரக்கம், விழுப்புரம்.
நன்றி : தரிசனச்சுடர் செப்டம்பர் 2023.
No Comments