
07 Jan அறுப்பு மிகுதி ஆட்களோ கொஞ்சம்
கடவுள் என்று ஒருத்தர் இருந்தா இதெல்லாம் நடக்குமா? ஏன் இப்படி எல்லாம் உலகம் சீர்கெட்டு இருக்குது? அநியாயம் தாண்டவம் ஆடுது? என்று கேள்வி கேட்கிற மாணவர் கூட்டம்!
கடவுளா? உலகத்தை அனுபவிக்க வேண்டிய வயசுல. காலேஜ்ல சேர்ந்து இருக்கோம்.அனுபவி ராஜா அனுபவி. உலகத்தை அனுபவிக்க வேண்டிய வயசுல கடவுளாவது? கத்தரிக்காயாவது? கடைசி காலத்துல கடவுளை பாத்துக்கலாம் பாஸ். அவர் எங்க போக போறாரு? என்றும் கடவுளுக்கு நேரம் குறிக்கிற மாணவர் கூட்டம்.
இவன் யாருடா கையில ரெண்டு போன் வச்சிருக்கான். இவன்தான் கல்லூரி லைஃபை என்ஜாய் பண்ணறான் மச்சான். டெய்லி படம். பீச்சுதான். டயத்துக்கு சாப்பாடு, நேரத்துக்கு நேரம் வேற வேற ஆளு. காலேஜ் எல்லாம் இவனுக்கு சும்மா என்று ஓர் உண்மையான அன்பு தெரியாமல் போலி அன்பில் நேரத்தை தொலைக்கிற இன்னொரு மாணவர் கூட்டம். இவன் என்னடா எச்சில் கூட முழுங்க மாட்டேஙறான்: நோன்பு இருக்காங்களாம் என்று ஒரு கூட்டம். டேய் அவன் மாலை போட்டு இருக்கான் பத்து நாளைக்கு எந்த கெட்ட பழக்கம் செய்ய மாட்டான். கிளாஸ்ல சார் கூட அவர சாமின்னுதான் கூப்பிடுவாரு என்று பக்தியில் திருப்தி காணும் பக்திகூட்டம். தன்னுடைய பிரச்சனைகளுக்கு எல்லாம் வழி தெரியாமல் வாழ்வை எந்த வழியில் முடித்துக் கொள்ளலாம் என்று வழி தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிற கூட்டங்களும் உண்டு.
இப்படி அநேக ஆத்துமாக்களை அனுதினமும் நம்முடைய கல்லூரி என்னும் மிஷனரி பணிதளத்தில் நாம் அனுதினமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவர்கள் எல்லாம் அறுவடைக்கு ஆயத்த மாய் இருக்கிற ஆத்துமாக்கள். இவர்களை ஆண்டவருக்கு நேராகத் திசை திருப்புவதற்கு ஆண்டவர் மாணவர்களை. பட்டதாரிகளை தேடிக் கொண்டிருக்கிறார்.
எனக்காய் பேசிட நாவு வேண்டும்
எனக்காய் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்
என்று தேவன் உன்னை அழைக்கிறார். ஏன் ஆண்டவர் உன்னை அழைக்கிறார்? அழைப்பின் முக்கியத்துவம் என்ன?
அறிந்தவர்கள் அறிவியாமல் இருப்பது நியாயம் அல்ல” (2 ராஜா. 7:9)
சத்தியம் அறிந்தவர்கள். சுவிசேஷம் தெரிந்தவர்கள். சத்தியத்தைப் போதிப்பவர்கள் நாம். மீட்பரை அறிந்து மீட்பரால் மீட்கப்பட்டவர்கள் நாம். பாவத்தை உணர்ந்து பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் நாம். பாவத்தின் பின் விளைவை அறிந்தவர்களும், நம்முடன் பாவத்தில் விழுந்து கிடப்பவர்களை அனுதினமும் கண்கூடாக காண்கிறவர்களும், நாம். நரகத்தையும் நரகத்தின் கொடூரத்தையும் அறிந்தவர்களும் யாரெல்லாம் நரகத்துக்கு செல்வார்கள் என்பதை அறிந்தவர்களும் நாம்தான். அது மட்டுமா! கண் திறக்கப்பட்டவர்கள். பரலோகத்திற்கான வழியை அறிந்த வர்கள். சீஷத்துவ முகாம். தலைமைத்துவ முகாம். மிஷனரி தரிசன முகாம் போன்ற முகாம்களில் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டவர்களும் நாம்தான். இத்தனை சிலாக்கியம் பெற்று இவ்வளவு ஆவிக்குரிய நன்மைகளை. சிலாக்கியத்தை பெற்று சத்தியத்தை அறிந்த நாம். சத்தியத்தை அறிவியாமல் இருப்பது நமக்கு நியாயம் அல்ல. கேள்விப்பட்ட நாம் கேள்விப்பட்ட சத்தியத்தை அறிவிக்காமல் சும்மா இருந்தால் கேள்விப்படாதவார்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்? (ரோமர் 10:14) கேள்விப் பட்ட நீங்களும் நானும்/இயேசுவை அறிந்த நீங்களும் நானும் இந்த இயேசுவை அறியாதவர்களுக்கு அறியாமல் இருப்பது நியாயம் அல்ல.
ஆகையால் அறிந்த நாம் அறிவிக்க முன்வருவோம். சூழ்நிலை களைக் காரணம் காட்டி, தேவன் தந்த ஆசீர்வாதத்தைப் பிடித்துக் கொண்டு, தேவ கட்டளையைப் புறக்கணியாதபடி, மனிதர்களுக்குப் பயந்து நமக்கு கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதத்தை ஆண்டவருடைய வார்த்தையை மற்றவருக்கு அறிவியாமல் இருப்பதும், சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல் இருப்பதும் நியாயம் அல்ல. அறிந்த சத்தியத்தை அறிவிக்க முன்வருவோம்.
அறிவியாவிட்டால் குற்றம் நம்மேல்சுமரும் (2 ராஜா 7:9)
சுவிசேஷம் அறிவிப்பது என் மேல் விழுந்த கடமை. சுவி சேஷத்தை நான் பிரசங்கியாமல் இருந்தால் எனக்கு ஐயோ (2 கொரி. 9:16). உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டவருக்கு நாம் கணக்கொப்புவிக்க வேண்டும். இத்தகைய கடமையை நாம் நிறைவேற்றாதிருப்போமானால் குற்றம் நம் மேல் சுமரும் என்று வேதம் போதிக்கிறது.
சுவிசேஷத்துக்கு நான் உடன் பங்காளி
பங்காளியாயிருக்கிற நான். பங்குதாரராக இருக்கிற நான். என் கடமையைச் செய்யாது இருப்பேன் என்றால் குற்றம் என் மேல் சுமரும் என்று பவுல் சொல்லுகிறார். அதே பவுல் சொல்லுகிறார் எனக்குப் பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல் வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங் கித்து உபதேசமும் பண்ணினேன். எல்லாருடைய இரத்தப் பழிக்கும் நீங்கி நான் சுத்தமாய் இருக்கிறேன் (அப். 20:20.27) என்று சொல்லு கிறார். என்னை யாரும் குற்றப்படுத்த முடியாது. எல்லாருக்கும் நான் சுவிசேஷத்தை அறிவித்துவிட்டேன் என்று தைரியமாய் சொல்லுகிறார்.
எனக்குத் தெரிந்த நபருக்கு உடன் பயில்கிற. பணி செய்கிற நபருக்கு சுவிசேஷத்தை, சத்தியத்தை நான் சொல்லத் தவறுவேன் என்றால் அவர்களுடைய இரத்தப் பழியை ஆண்டவர் நம்மிடம் கேட்கிற வராக இருக்கிறார். இதை உணர்ந்தே பவுல் எல்லாருடைய இரத்தப் பழிக்கும் நான் நீங்கலாய் இருக்கிறேன் என்று கூறுகிறார். இதனை உணர்ந்த மிஷனரிகள் ரேனியஸ். ஜாண் தாமஸ். கால்டுவெல். சிகன்பால் டேவிட் லிவிங்ஸ்டன். ஏமி கார்மைக்கேல் அம்மையார், வில்லியம் கேரி போன்றோர் சுவிசேஷத்திற்கு நாங்கள் எல்லாரும் பங்குதாரர்கள் என்பதை உணர்ந்து கடல் கடந்து வந்து கடமையை நிறைவேற்றி குற்றத்துக்கு நீங்கலானார்கள்.
அறிவிப்போம் வாருங்கள் (2 ராஜா 7:9)
நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறை வேற்றவுமே விரும்புகிறேன் (அப். 20:24). உங்களையும் என்னையும் உண்மையுள்ளவனென்றெண்ணி இந்த ஊழியத்திற்கு (மாணவர் ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால் அவரை ஸ்தோத்தரிக்கிறேன் (1 தீமோ. 1:12). தேவையுள்ள இந்த மாணவர் சமுதாயத்திற்கு தேவன் சத்தி யத்தை அறிவிப்பதற்காக உங்களையும் என்னையும் அழைத்திருக் கிறார். அழைக்கப்பட்ட நாமும் இயேசுவுக்குரியவைகளைத் தேடாதபடி உலகத்தாரைப் போல நமக்குரியவர்களாய், நமக்குரியவைகளை மட்டும் நாம் தேடிக் கொண்டிருப்போம் என்றால் அது நமக்கு நன்மை தராது, அதே நேரம் தேவ சித்தமும் மாணவர்கள் மத்தியில் நிறைவேறாது. தேவ சித்தம் நிறைவேற உன்னை உன்னுடைய கல்லூரியிலும், பணி செய்கிற ஸ்தலத்திலும் ஆண்டவர் அழைத்திருக்கிறார். அறுப்பு மிகுதி வேலை யாட்களோ குறைவு. இந்த அறுவடைப் பணிக்கு உங்களையும் உங்கள் தாலந்துகளைப் பயன்படுத்திட அழைக்கிறார்.
அறிந்த ஆண்டவரை அறிவிக்க அழைப்பு கிடைத்தவுடன் தங்களுடைய தேசத்தைவிட்டு, இனத்தைவிட்டு, மொழியைவிட்டு. இந்திய தேசத்துக்கு வந்த மிஷனரிகளை நினைவுகூருங்கள். தங்களுக்கு இருந்த சொகுசு வாழ்க்கையை விட்டு மொழி தெரியாத இடத்திற்கும். வசதி இல்லாத கிராமத்திற்கும் அழைப்பு கிடைத்த உடனே கீழ்ப்படிந்து அறுவடைக்குத் தயாராக வந்தார்கள். எனக்கு மொழி தெரியாது. கலாச்சாரம் தெரியாது. உணவுப் பழக்கம் ஒத்து வராது இங்குள்ள கால சூழ்நிலையில் வாழ முடியாது என்று நொண்டிச் சாக்குகளை சொல்லாதபடி அழைப்புக்கு கீழ்ப்படிந்து அறுவடைக்கு வந்ததால் தேவன் அவர்களை அதிசயமாய் ஊழியத்தில் வழிநடத்தினார். கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது (2 கொரி 5:14). கிறிஸ்துவின் அன்பினால் ஏவப்பட்டு, உந்தப்பட்டு அழைப்புக்குக் கீழ்ப்படிந்ததனால் இன்றும் அவர்கள் மரித்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சரித்திரம் படைக்கிற வாழ்விற்கு. அறுவடைப் பணிக்கு நம் அனைவரையும் இந்தப் புதிய ஆண்டில் ஆண்டவர் அழைக்கிறார். சிந்திப்போம்! செயல்படுவோம்!!
நன்றி: தரிசனச்சுடர் ஜனவரி 2026
No Comments