
12 Feb அவள்தான் ரியா…
பட்டாம்பூச்சிகள் அழகாக சிறகடிக்க, கானக்குயில்கள் சங்கீதம் பாட, சிறு சிறு தூரல்கள் அந்த மலையடிவாரத்தில் விழத்தொடங்கியிருந்தது.
கவினும் ரியாவும் கைகள் கோர்த்தவர்களாய் இருவரின் கண்களையும் இமையசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். காதல் பெருக்கில் இருவரின் கண்களும் ஆனந்த கண்ணீரை சொரிந்துகொண்டிருந்தன.
இப்படியே வாழ்க்கை முழுவதும் இருந்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் இருவருக்குமே இருந்தது.
அந்த நாள் நன்றாகவே முடிந்தது.
“டேய் ரவி, ஏன்டா கவினும் ரியாவும் ஒரு வாரமா கல்லூரிக்கு வரவேயில்லை.?”
“தெரியலடா ராகுல், நமக்கெதுக்குடா அதெல்லாம். சாக்கடைல கல்ல தூக்கிப்போட்டு நம்ம மேல சாக்கடை தெறிச்சதுதான் மிச்சம் டா!”
ரவி இப்படி சொன்னதும் பழைய நினைவுகள் அனைத்தும் மின்னலாய் வந்து சென்றன ராகுலின் முன்பு.
கவின் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். அப்பா குடிகாரர். அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் உடல்நலம் குன்றியவர். அன்றாடம் சாப்பாட்டுக்குக்கூட கஷ்டப்படுவாங்க. இந்த சூழ்நிலையில் மருத்துவமும் கைக்கொடுக்கத் தவறியதால் கவினின் தாயும் காலமானார்.
தந்தையும் குடிகாரர் என்பதால் நிர்கதியாய் விடப்பட்டான் கவின். அந்த சூழ்நிலையில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அறிமுகமானவான்தான் ராகுல். கவினும் ராகுலும் நெருங்கிப் பழகியதால் கவினின் குடும்பச் சூழ்நிலை ராகுலுக்குத் தெரிய ஆரம்பித்தது. இதனால் கலக்கமடைந்த ராகுல் கவினின் சூழ்நிலையை தன் பெற்றோரிடம் தெரிவித்தான். அவனுக்கு நீங்கள் எப்படியாவது உதவ வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை ஏற்று தன் மகன் படிக்கப்போகும் கல்லூரியிலேயே ஒரு சீட்டு வாங்கிக் கொடுத்தார் ராகுலின் தந்தை.
தேர்வுக் கட்டணம், சீருடை, பேருந்துக்கான பணம் போன்ற எல்லாவற்றுக்கும் ராகுல் தன்னால் முடிந்ததை கவினுக்கு செய்து வந்தான். இருவரும் நெருங்கிப் பழகியும் வந்தனர். அவர்களின் நட்பைக் கண்டு அனைவரும் வியந்ததும் உண்டு.
இந்நிலையில், கவினுடைய இன்ஸ்டாகிராம் கணக்குக்கு ஒரு செய்தி வந்தது.
“ஹாய் கவின். நான்தான் ரியா.”
கவினுக்கு பெரும் ஆச்சரியமாய் இருந்தது. அவனது வகுப்பில் மிகவும் அழகான மாணவி அவள். எத்தனையோ பேர் ரியாவுக்குப் பின் சுற்றியிருக்கிறார்கள்.
“யாரையும் ஏறிட்டுக்கூடப் பார்க்காதவள் இன்று நமக்கு செய்தியனுப்பியிருக்காளே,” என்று கவின் வியந்தான்.
“ஹலோ ரியா, குட் ஈவ்னிங்.”
“குட் ஈவ்னிங் மிஸ்டர் ஹாண்ட்சம் கவின்.”
கவினால் இதை நம்பவே முடியவில்லை. சிறிதுநேரம் கழித்து “தேங்க் யூ” என்று பதிலளித்தான். அது மட்டுமின்றி,
“யூ ஆர் கார்ஜியஸ் ரியா!” என்று ரிப்ளை செய்தான். ரியாவிடமிருந்து கண்களில இதயம் பொறிக்கப்பட்ட எமோஜி வந்தது.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த நட்பு இருவருக்கும் இடையே காதலாய் மாறியது. கவினும் ரியாவும் காதலிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. தன்னோடு நெருங்கிப் பழகி எல்லா உதவியையும் செய்து வந்த நண்பன் ராகுலுக்குக்கூட கவின் தான் காதலிப்பதை சொல்லவேயில்லை. ராகுல் மிகவும் மனம் வருந்தினான்.
ராகுலோடு கவின் பழகுவதை சிறிது சிறிதாகக் குறைத்துக்கொண்டான். கவினுக்கு தினமும் ராகுல் மதிய உணவு கொண்டுவருவது வழக்கம்.
“கவின், ஏன்டா இன்னிக்கி நீ சாப்பிட வரல. உனக்காக சாப்பாடு கொண்டு வருவேன்னு தெரியும் இல்ல.?”
“ஹே மச்சான் கோச்சிக்காதடா. இனிமே நீ சாப்பாடு கொண்டுவர வேண்டாம்.”
“வொய் கவின்?”
“எனக்கு ரியா கொண்டு வறேன்னு சொல்லிருக்காடா. இனிமே நாங்க சேந்து சாப்பிடுவோம். தேங்க்ஸ் டா”.
இப்படி கவினின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிட்டது. வகுப்புக்கு தாமதமாக வருவது. தன் காதலியோடு திரைப்படத்துக்கு செல்வது போன்ற நடவடிக்கையால் கல்வியிலும் அவனது கவனம் முற்றிலும் சிதறியது. இதையெல்லாம் பார்த்து மனம் வேதனையடைந்த ராகுல் தன் நண்பன் ரவியோடு சேர்ந்து அவனிடம் பேச நினைத்தான்.
“கவின் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்டா.”
“நீ என்ன பேசப் போறனு எனக்குத் தெரியும் டா. இது என் லைஃப் பிரச்சனைடா. நீ இதுல இன்வால்வ் ஆகாத. நீ எனக்கு உதவி செஞ்சது உண்மைதான். அதை நான் மறக்கல. ஆனா, ரியா உன்னைவிட அதிகமா என்ன நேசிக்கிறா. எனக்கு அவ போதும். இதையெல்லாம் கண்டுக்காம என்கூட இருக்கனும்னா இரு, இல்லனா விடுடா!” என்று மனசாட்சியே இல்லாதவனாய் பதிலளித்தான் கவின். இதனால்தான் ரவி ராகுலிடம், கவினும் ரியாவும் ஏன் ஒரு வாரமாக கல்லூரிக்கு வரவில்லை என்று கேட்டபோது சாக்கடையில் ஏன் கல்லைப் போடவேண்டும் என்று கடினமாக பதிலளித்திருப்பான்.
கவினும் ரியாவும் கல்லாரிக்கு வருவது முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால் மனம் வருந்திய ராகுல் கவினின் இல்லத்தைத் தேடிச் சென்றான். கதவு பூட்டப்பட்டிருந்தது.
பக்கத்து வீட்டு அக்கா ஒருவர், “அந்தப் பையன் இங்க இல்லப்பா, ஏதோ பொண்ணோட பழக்கமாமே. அந்தப் பொண்ணு வேற பையன் ஒருத்தனோட வீட்ட விட்டு ஓடிட்டாளாம். அது தாங்க முடியாம விஷத்தை குடிச்சிட்டான். கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணிருக்காங்க. அங்கப் போய் பாரு. தாய் இல்லாத புள்ளைக்கு இதெல்லாம் தேவையா. படிக்கிற வயசுல இதெல்லாம் எதுக்குப்பா? என்னமோ!” என்று வேதனையோடு சொன்னார்.
வேகமாக ராகுல் மருத்துவமனைக்கு விரைந்தான். ரிசப்சன்ல விசாரிச்சிட்டு 305 ஆம் அறைக்குச் சென்று பார்த்தான் ராகுல்.
கவின் ராகுலைக் கண்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்தான். ராகுலின் முகத்தைப் பார்ப்பதற்குக் கூட வெட்கமாக இருந்தது. அவனுடைய இந்த நிலையைக் கண்டு ராகுல் உண்மையில் அழுதுவிட்டான்.
“ஏன்டா இப்படிப் பண்ண? உன்ன இந்த கோலத்துல பாப்பேன்னு எதிர்பாக்கலடா கவின். அந்த ரியாவைப் பற்றி எனக்கு முதல்லயே தெரியும்டா. நான் அதை சொல்லத்தான் அன்னைக்கு வந்தேன். நீதான் சொல்லவே விடல,” அவன் கரங்களைப் பற்றிக்கொண்டு பேசினான் ராகுல்.
கண்ணீர் துளிகள் கவினின் கண்களில் பெருக்கெடுத்து ஓடின.
“என்ன மன்னிச்சிடுடா ராகுல். நான் ஒரு பாவிடா. நான் உன்னப் புரிஞ்சுக்கலடா.
நீ என்மேல வெச்ச அன்பை நான் உதாசினப் படுத்திட்டேன் டா. நீ என்னை மன்னிப்பியாடா?”
“டேய் பெரிய வார்த்தைலாம் பேசாதடா கவின்.”
“நான் இவ்வளவு துரோகம் உனக்குப் பண்ணியும் நீ எப்படிடா என்னை இன்னும் நேசிக்கிற? உனக்கு என்மேல கோபமே வரலயா?
“இல்லைடா கவின். கோப்பட மாட்டேன். அது எனக்கு வரவும் வராது. நான் உன்னை முழுமையா நேசிக்கிறேன்டா. அதுக்குக் காரணம் நான் இல்லை.
ஆச்சரியத்தோடு பார்த்தான் கவின்.”
“ஆமா கவின். அதுக்குக் காரணம் நான் இல்லைடா. அன்பே உருவாய் தம் உள்ளத்தையும் தம் உயிரையும் எனக்காகக் கொடுத்த அந்த இயேசுவின் அன்புதான் அதுக்குக் காரணம். அதனால்தான் எல்லாரையும் என்னால நேசிக்க முடியுது. புரிஞ்சுக்க முடியுது. உன்னை விட்டுட்டுப் போனவளுக்காக சாக நினைச்சியே, உனக்காக உயிரையே கொடுத்தவர்தான் இந்த இயேசு. அவரோட அன்பு ஒரு மனுஷனுடைய வாழ்க்கையில வந்துடுச்சினா அவன் எதுக்காகவும் எது பின்னாலயும் போகமாட்டான். அது சுத்தமான அன்பு. ஏமாற்றாத அன்பு. என் வாழ்க்கையிலயும் அந்த அன்புதான் மாற்றத்தை ஏற்படுத்துச்சு. நான் உன்ன மன்னிக்கத் தேவையில்ல. இயேசுவிடம் போ. அவர் உன்னை அணைத்துக் கொள்வார். அவரை இறுகப்பிடிச்சிக்கோடா, அவரிடம் உன் இதயத்தைக்கொடு. அழகாகப் பாத்துப்பாருடா கவின்.
ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்த கவினின் கண்களில் வழிந்த கண்ணீர் நின்றது. அவன் முகம் பிரகாசிக்கத் தொடங்கியது. அழகாகப் புன்னகைத்தான்.
“தேங்க் யூ ராகுல்.” கவின் சொன்னான்.
ஒரு சிறிய மனமாற்றம் கவினின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
நன்றி: தரிசனச்சுடர் பிப்ரவரி2025
Riya k
Posted at 14:12h, 14 FebruaryReally story is good but riya is my name😄