
04 Jun அவரும்… நானும்…
Bye Bye அம்மம்மா… ஈவ்னிங் பார்ப்போம்… கை அசைத்தபடியே ஸ்கூல் வேனில் துள்ளி ஏறினாள் ஷம்மா.
வேன் மறையும் வரை நின்று பார்த்துவிட்டு உள்ளே வந்தாள் ஐலின்.
அரை மணி நேரத்தில் அனிதாவும் கிளம்பி விட்டாள்.
சித்தி.., Break Fast, Lunch, Table ல வச்சிருக்கேன்.
போட்டு சாப்பிடுங்க. ரஞ்சன் பத்து மணிக்குத்தான் எழுந்திருப்பாரு. மால்ல ஏதாவது வாங்கனும்னா கூட்டிட்டுப் போக சொல்லுங்க.
பறந்துவிட்டாள் காரில். வீடு நிசப்தமாயிருந்தது.
அக்கா கஸ்தூரி இறந்து பதினைந்து வருடமாகிறது. அத்தானும் சில வருடங்களிலேயே அக்காவைப் பின்பற்றிச் சென்று விட்டார்.
பெறாத மகளான அனிதாவின் வேலை, திருமணம். பிள்ளைப்பேறு என அனைத்தையும் முன்னின்று நடத்தினாள் ஐலின்.
வருடம் ஒரு முறை பதினைந்து நாள் பெங்களூரு வந்து இவர்களோடு தங்கிச் செல்வாள்.
வருடங்கள் உருண்டதே தெரியவில்லை. ஷம்மா ஏழாம் வகுப்பு. கொழுந்து வெற்றிலை போல் அழகாய் நிற்கிறாள்.
காலங்கள் மாற, மாற ஏதோ ஒன்றில் குடும்பமாக இவர்கள் நழுவி, விலகிச் சென்று கொண்டிருந்தனர்.
பள்ளியில் படிக்கும் போது 119ஆம் சங்கீதத்தை மனப்பாடமாகச் சொல்லிப் பரிசு வாங்கிய அனிதா. இப்போது பின் தூங்கி, பின் எழுந்து வேலைக்கு ஓடுகிறாள் (கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிஸிக்ஸ் பி.ஜி. டீச்சராகப் பணியாற்றுகிறாள்)
காலைல பைபிள் வாசிச்சியா அனிதா? என்று கேட்டால், கார்ல ஆடியோ பைபிள் செட் பண்ணிருக்கேன். கேட்டுட்டே போவேன் என்பாள்.
‘Our Daily Bread ‘ ஆங்கில தின தியானப் புத்தகம்தான் வீட்டில் மூவரும் பயன்டுத்துகிற ஒரே ‘ஆன்மீக ப்ரெட்’டாக இருந்தது.
நகரின் சிறந்த பகுதியில் அமைந்திருந்த அவர்கள் வீடு, மாதம் அவர்கள் செலுத்தும் மிகப் பெருந்தொகையான இ.எம்.ஐக்குச் சான்றாக நின்றது.
ஒரு காலத்தில் புதன் கிழமை தோறும் வீட்டில் நடைபெறும் உயிரோட்ட மான பைபிள் ஸ்டடி மறைந்தே போயிருந்தது.
கல்லூரியில் ஆத்தும ஆதாயனாக இருந்த ரஞ்சன். ஐ.டி. இன்டஸ்ட்ரியில் பணியாற்றத் துவங்கியதிலிருந்து ஃபாரின் கஸ்டமர்ஸ், ஃபாரின் ப்ராஜக்ட்ஸ் ஆதாயனாக மாறியிருந்தான்.
மாலையில் முகமெல்லாம் மலர்ச்சியாக வந்தாள் ஷம்மா.
ட்ராயிங் காம்படிஷன்ல ஃபர்ஸ்ட் ப்ளேஸ்… என்றபடி ஷீல்டை அம்மம் மாவிடம் கொடுத்தாள்.
வெரி குட். ஆண்டவருக்கு நன்றி சொன்னியா?
எஸ் அம்மம்மா என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டாள் ஐலின்.
உனக்குப் பிடிச்ச ப்ரெட் அல்வா, வெஜிடபுள் போண்டா செஞ்சிருக்கேன்.
ட்ரெஸ் மாத்திட்டு, முகம், கை, கால் கழுவிட்டு சாப்பிட வா.
அம்மம்மா… எங்க கூடவே இருந்துருங்களேன்… கெஞ்சினாள் ஷம்மா.
அப்புறம் பாபினும், கிரேஸ்ஸும் என்கிட்ட கோவிச்சுக்குவாங்களே… அம்மம்மா சிரித்தாள்.
ஐலின் யோசித்துக் கொண்டேயிருந்தாள். வந்து ஒரு வாரமாகி விட்டது. அருமையான இந்தப் பிள்ளைகள் ஆண்டவரை விட்டுக் கொஞ்சம், கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறார்கள்.
முழங்காலுக்கும். வேதப் புத்தகத்திற்கும் திரும்புவதற்குத் தாமதிக்கிற ஒவ்வொரு நாளும் சத்துருவோடு முழு உடன்படிக்கை செய்யும் காலமாகி
அன்று வெள்ளி இரவு. அடுத்த இரு நாட்களும் மூவருக்கும் விடுமுறை.
டைனிங் டேபிளில் அமர்ந்திருக்கும்போது, மெதுவாகத் துவங்கினாள் ஐலின். நாளைக்குக் காலைல நாம மூணு பேரும் ஃபாஸ்ட் பண்ணி ஜெபிப்போமா?
ரஞ்சனும், அனிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
இவரோட ப்ரெண்ட் வெட்டிங் டே பங்க்ஷன் பத்து மணிக்கு… அனிதா இழுத்துப் பேசினாள்.
அதற்குள் ஷம்மா. அம்மம்மா நான் அவங்க கூடப் போகல, நாம ரெண்டு பேரும் சேர்ந்து ப்ரேயர் பண்ணுவோமா?
தெனம், தெனம் நீங்க காலைல, நைட்ல முட்டி போட்டு ஜீஸஸ்ட்ட ஜெபம் பண்றத பாக்குறப்ப எனக்கும் ஆசையாயிருக்கு…
அனிதாவும், ரஞ்சனும் குற்ற உணர்வோடு தலை கவிழ்ந்தனர்.
அனிதா. உங்க அம்மா இருந்த வரைக்கும் சனிக்கிழமை கண்டிப்பான உபவாச நாள்… அப்படித்தான?
அனிதா தலையசைத்து ஆமோதித்தாள்.
ரஞ்சன் உறுதியாகக் கூறினான். ஆன்ட்டி நாளக்கி நாலு பேருமே ஃபாஸ்ட்டிங் ப்ரேயர் எடுப்போம்.
ஆவியில தொடங்குன நான் மாம்சத்துல முடிச்சுருவேனோன்னு பயமா யிருக்கு. வேலையும், சோஸியலைசேஷன்ற பேர்ல வெளி உலகத் தொடர்புகளும் எங்களோட விக்கிரகமாயிடுச்சோன்னு நடுக்கமாயிருக்கு ரஞ்சன் மனமுடைந்து பேசினான்.
ஐலின் உறுதியும் கண்டிப்புமான குரலில் தொடர்ந்தாள்.
நான் பிதாவானால் என் கனம் எங்கே, எனக்கு பயப்படும் பயம் எங்கேன்னு ஆண்டவர் கேக்குறார்.
ஒரு நாளின் முதல் மணி நேரத்த தேவனுக்கென்று கொடுக்காமப் பின்வாங்குனா. அந்த நாள சத்துரு களவாடிருவான். தோல்வியும். பயமும், பெலவீனமுமே அந்த நாளின் அறுவடையாகக் கெடைக்கும்.
கணவன், மனைவியா நீங்க சேர்ந்தும், தனித்தனியாகவும் தேவனோட பேசுறத, வேதம் வாசிக்கிறத உங்க மகள் பாக்கலன்னா, பின் ஒருநாள் அவளுக்கு உங்களால ஆலோசனை குடுக்க முடியாது.
இருவரும் தாழ்மையோடு தங்கள் தவறை ஒத்துக் கொண்டனர்.
ஆண்டவர் மேல வச்சிருக்கிற ஆதி அன்புக்குத் திரும்புங்க பிள்ளைகளா.
ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் அவர்கள் ஆசரித்த உபவாச ஜெப ஐக்கியம் மனசைக் கழுவி சுத்தமாக்கியது. தேவனோடு தனித்திருக்கும் ஆசையை வளர்த்தது.
ஜலின் மன நிறைவோடு ஊருக்குக் கிளம்பினாள்.
…நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லமையுள்ளவராயிருக் கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன் (2 தீமோ. 1:12).
No Comments