
20 Aug டார்லின் டெப்லர் ரோஸ்
“கர்த்தர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று சொல்லியிருக்கிறார்” எனத் தன் கணவன் ரஸலின் வாயிலிருந்து உதிர்ந்த இவ்வார்த்தைகளே அவர் தன்னிடம் கூறிய இறுதி வார்த்தையாக இருக்கும் என டார்லின் ரோஸ் நினைத்துப் பார்க்கவில்லை. தன் இளம் வயதில் தன்னை கானகப் பகுதியில் அழைத்து வந்த கர்த்தர் மேற்கொண்டு தன் வாழ்க்கையில் நியமித்து வைத்திருக்கும் காரியங்களைப் பொறுமையாய் அனுபவிக்கக் காத்திருந்தார் டார்லின் ரோஸ்.
1917ஆம் ஆண்டு பிறந்த டார்லின் டெப்லர் ரோஸ் தன் ஒன்பதாம் வயதில் இயேசுகிறிஸ்துவைத் தன் வாழ்வின் ஒளியாகவும் இரட்சிப்பாகவும் ஏற்றுக்கொண்டார். தன் பத்தாம் வயதில் “யார் எனக்காகப் போவார்கள்?” என்ற தலைப்பில் தன் திருச்சபையில் அளிக்கப்பட்ட செய்தியினைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, தன் தோள்களை யாரோ தட்டுவதை உணர்ந்தார். சுற்றிலும் பார்த்த அவர் ஒருவரையும் காணவில்லை. என்றாலும் கர்த்தம் தம் பணி செய்யத் தன்னை அழைப்பதை உணர்ந்த டார்லின் அன்றே (பத்து வயது) கர்த்தர் தன்னை எங்கு செல்லும்படி கூறுகிறாரோ அங்கே செல்வேன் என தீர்மானித்துத் தன்னை அர்ப்பணித்தார். தென்கிழக்கு ஆசியாவில் அடர்ந்த பகுதியான நியு கினியா பகுதியில் ஆரம்பகால ஊழியங்களை நிறைவேற்றி வந்த ரஸல் என்பவரைத் தன் பத்தொன்பதாம் வயதில் திருமணம் செய்துகொண்ட டார்லின், அவருடன் இணைந்து பணிக்களம் செல்லத் தயாரானார். அடர்ந்த கானகப் பகுதிகளுக்குள் ஆவிகள் மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்த “கபாகு’ என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் தன் இளம் மனைவியை அழைத்துச் செல்ல ஆரம்ப நாட்களில் ரஸல் துணியவில்லை. என்றாலும் ஓராண்டுக்குப் பின் இருவரும் இணைந்து சென்றபோது, அங்குள்ள மக்கள் தாம் காணும் முதல் வெள்ளைப் பெண்ணான டார்லினை சந்தோஷத்துடன் வரவேற்றனர். கபாகு இன மக்கள் மத்தியில் வாழ்வதை கர்த்தருடைய சித்தமாக ஏற்றுக்கொண்ட டார்லின் விரைவிலேயே அவர்கள் மொழியைக் கற்றுக்கொண்டார். இயேசுகிறிஸ்துவைக் குறித்து தம் தாய்மொழியிலேயே டார்லின் கூறக்கேட்ட மக்களில் அநேகர் கிறிஸ்துவை விசுவாசித்தனர். சபை நிறுவப்பட்டது, என்றாலும் ரஸல் மற்றும் டார்லின் இருவரும் தனிநபர் ஊழியத்தில் ஆர்வம் கொண்டபடியால் ஆத்துமாக்களைத் தேடிச் சென்றனர், விசுவாசத்தில் அவர்களை ஊன்றக்கட்டினர்.
உலகை உலுக்கிய இரண்டாம் உலகப்போர் இவர்களது ஊழியப் பாதையையும் திசை திருப்பியது. பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் தாங்கள் தங்கியிருந்த தீவுப் பகுதி ஜப்பானியரால் கைப்பற்றப்பட்டதால் ஜப்பானிய அரசால் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். தான் தனியே சிறைப்பிடிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட தருணத்தில்தான், ரஸல் டார்லினிடம் “கர்த்தர் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று கூறி டார்லினிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். டார்லின் பெண்களுக்கான கண்காணிப்பாளர் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டார். சிறையிலிருந்தபோது தன் கணவரின் மரண செய்தி கிடைத்தபொழுது மிகவும் கலங்கினார். என்றாலும் தன்னைக் கொடூரமாக நடத்திய கண்காணிப்பாளருக்கு அந்நேரத்தில் நற்செய்தி அறிவிக்கும் வாய்ப்புக்கிட்டவே அதைப் பயன்படுத்தி நற்செய்தி அறிவித்தார். டார்லின் உளவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்டு, கொடூரமான முறையில் நடத்தப்பட்டபோது இந்த கண்காணிப்பாளரே டார்லினுக்காகப் பரிந்துபேசினார். பின்னாளில் இவர் கிறிஸ்தவ விசுவாசியானார் என்னும் தகவல் டார்லினுக்குக் கிடைத்தது. எல்லாச் சூழ்நிலையிலும் கர்த்தர் தம்மோடு இருப்பதை உணர்ந்த டார்லின் “என் கிருபை உனக்குப் போதும்” என்னும் தொனி தன் காதில் தொனித்துக்கொண்டே இருந்ததாக தம் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.
சிறையிலிருந்து விடுதலையாகி தம் தாயகமான அமெரிக்காவுக்குத் திரும்பியபோதும் அவர் தம் ஆத்துபாரம் குறையவில்லை. சிறிது நாட்களுக்குப் பின் (1948) ஜெரால்ட் ரோஸ் என்பவரைத் திருமணம் செய்தவர், அவருடன் இணைந்து 1949 ஆம் ஆண்டு மீண்டும் நியு கினியாவுக்குச் சென்றார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் அங்கு ஊழியம் செய்த டார்லின் தன் 87ஆம் வயதில் பரமனின் பாதம் அடைந்தார். டார்லின் தன் சுயசரிதையான Evidence Not Seen? என்னும் புத்தகத்தை எழுதும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்: என் வாழ்க்கை அனுபவங்களை என் மகன்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் தம் தாயாரின் கர்த்தர், தம் கரத்தின் வல்லமை குறையாமல் இன்றும் ஜீவித்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
ஆம் கர்த்தர் கரத்தின் வல்லமை என்றும் குறையாது. பத்து வயதில் ஊழியத்திற்குத் தன்னை அர்ப்பணித்த டார்லினைக் கடினமாக சூழ்நிலையிலும் விட்டுவிலகாமல் வழிநடத்தின கர்த்தம் நம் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பையும் கனப்படுத்துகிறார். விசுவாச சோதனைகளினால் அலசடிப்படாத அர்ப்பணிப்பு நம்மிடம் உண்டா?
References:
- barbarah.wordpress.com
- Imb.org/2017/05/10/darlenedeiblerrose
- Darlenrose.org/testimonies.html
 
   
 	
No Comments