
07 May எலியாவிடம் ஒரு நேர்காணல் – ஒரு கற்பனை
நிகழ்விடம்: விண்ணுகலகம்
நமது நிருபர்: கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. ஐயா. தங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற வியத்தகு சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் குறித்து எமது வாசகர்கள் அறிந்துகொள்ளும்படி தங்களைப் பேட்டி காண விரும்புகிறேன். தற்போது ரிலாக்ஸாகத்தானே இருக்கிறீர்கள்?
எலியா: ஆமாம், மிக்க மகிழ்ச்சி! கேளுங்கள்.
நமது நிருபர்: தங்கள் மூலம் கர்த்தர் அநேக அற்புதங்களை நடப்பித்ததாக அறிகிறோம். குறிப்பாக நீங்கள் மன்னன் ஆகாபிடம் ‘என் வாக்கின்படியேயன்றி இந்த வருடங்களில் பனியும், மழையும் பெய்யாதி ருக்கும்’ என்று எப்படி அத்தனை ஆணித்தரமாகச் சொன்னீர்கள்? என் ஊழியக்காரன் சவால்விட்டு விட்டானே என்று சொல்லி, கர்த்தரும் தங்கள் தேவைகளைச் சந்திக்க அடுத்தது செய்த அற்புதங்கள் எத்தனை. எத்தனை! அப்பப்பா! நம்ப முடியவில்லையே!
எலியா: எல்லாம் கர்த்தரோடுள்ள என் நெருங்கிய உறவாலும், அவர் மேல் நான் கொண்டிருந்த அசைக்க முடியாத விசுவாசத்தாலும் தான் அவ்வாறு சொல்லத் துணிந்தேன். அதனால்தான் கேரீத் ஆறு வற்றிப்போகும் நாட்கள் வரை காலை, மாலை இரு வேளைகளிலும் நேரம் தவறாமல் வெஜ், நான்வெஜ் என ‘யேகோவாயீரே என்ற நாமத்தையுடைய என் தேவன் என்னைப் போஷித்தார். நான் வேண்டிக்கொள்ளுகிறதற்கும். நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் எனக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே எனக்குச் செய்ய வல்லவராய் அவர் இருந்ததை ஆயிரம் நாவுகளால் துதித்தாலும் அது போதாது. அல்லேலூயா!
நமது நிருபர்: நான் உனக்குப் போதித்து. நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்: உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்று அவ்வப்பொழுது உமக்கு ஆலோசனை தருவாராமே!
எலியா: உண்மைதான்! அடுத்து சாறிபாத் ஊருக்குப் போகச் சொன்னதும் அவரே. அங்குள்ள விதவை தன் கைவசமிருந்த கொஞ்சம் மாவையும் எண்ணெயையும் கொண்டு பசியாறிப் பின் செத்துப்போகவிருப்பதாகச் சொல்லியிருந்தும். அவள் வீட்டில் ஏறக்குறைய மூன்றரை வருடம் இரண்டும் குறைவின்றிப் பெருகியதும், வியாதிப்பட்டு மரித்த அவளு டைய மகன் வரலாற்றில் முதன் முதல் உயிரோழுப்பப்பட்டதும் ஆகிய அற்புதங்கள் எல்லாம் எண்ணித் துதிக்கிறேன். அல்லேலூயா!
நமது நிருபர்: ஆம். ஐயா! நானும் மனதாரத் துதிக்கிறேன். அது மட்டுமா. கர்மேல் பர்வதத்தில் பாகால் மற்றும் தோப்பு விக்கிரக தீர்க்கதரிசிகள் மொத்தமாக 850 பேரிடமும் கிண்டலாகப் பேசியதைப் படித்தபோது எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள் முன்பாக அக்கினியால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்று சவால் விடுத்து மெய்ப்பித்த மயிர்க்கூச்செறியும் அற்புதங்கள்தான் என்னே! இவை யாவும் இன்றைய நாட்களில் தேவை எனில் மிகையன்று.
எலியா: கர்த்தருடைய கை என்மேல் இருந்ததனால் உள்ளங்கையளவு சிறிய மேகம் கறுகறுத்து. பெருமழையின் இரைச்சல் கேட்டு, ஆகாப் இரதத்தைதைப் பூட்டி தலைதெறிக்க ஓடியதையும் கேள்விப்பட்டிருப்பாயே!
நமது நிருபர்: ஆம் ஐயா! ஒரு கேள்வி! தாங்கள் எங்களைப் போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மூன்றரை வருஷம் மழை பெய்யாத படிக்கும். பின்பு மழை பெய்யும்படிக்கும் கருத்தாய் ஜெபித்த போதெல்லாம் அதன்படியே நடந்ததே! அதன் இரகசியம்தான் என்ன?
எலியா: இரகசியம் என்று ஒன்றுமில்லை. என் உறுதியான விசுவாசமும், தைரியமும்தான்
(மத். 21:22: யாக். 1:6,7: மத். 17:20: லூக்கா 17:6: 1 யோவான் 5:14)
நமது நிருபர்: எல்லாம் நன்றுதான்! ஆனால் கர்த்தர் தங்களைக் கொண்டு எத்தனையோ அற்புதங்களை நடப்பித்திருக்க. தாங்கள் ஆகாபின் மனைவி யேசபேல் விடுத்த எச்சரிக்கையினால். உயிருக்குப் பயந்து, ஓடி ஒளிந்து. சாக வேண்டுமென்று வேண்டி. ஒரு சூரைச் செடியின் கீழ் படுத்து அயர்ந்து ரிலாக்ஸாகத் தூங்கியது எந்த வகையில் நியாயம்?
எலியா: எனக்கு வெட்கமுண்டாக நன்றாகத்தான் கேட்கிறாய். பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டிய நான் ஏனோ என் அவிசுவாசத்தினால் அவனுக்கு இடம் கொடுத்து விட்டேன். இப்போது நினைத்தாலும் அதற்காக வருந்துகிறேன்.
நமது நிருபர்: ஆனாலும் தங்களை அழைத்த தேவன் ஒரு தூதனைக் கொண்டு ஒரு முறைக்கு இரு முறை தட்டி எழுப்பி “எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்” என்று கேட்டு “நீ பண்ண வேண்டிய பிரயாணம் வெகுதூரம்” என்று தங்களைக் குறித்த தேவ சித்தத்தை நினைப் பூட்டியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். நடந்ததென்ன?
எலியா: அதை ஏன் கேட்கிறாய்? ஆசகேலைச் சிரியாவின் மேலும் யெகூவை இஸ்ரவேலின் மேலும் இராஜாக்களாகவும், எலிசாவைத் தீர்க்கதரிசியாகவும் அபிஷேகம் பண்ண வேண்டும் என்று கர்த்தர் சொன்னார். ஆனால் அவருடைய ஊழியத்தை நிர்விசாரமாகச் செய்ததி னிமித்தம் எலிசாவை மட்டுமே என் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் செய்ய வேண்டியதாயிற்று. அந்த மனக்குறை இன்றளவும் என்னை வருத்துகிறது.
நமது நிருபர்: ஆனாலும் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன். சாக வேண்டும் என்று விரக்தியிலிருந்த தங்களை இன்றளவும் மரணமடையாமல் கர்த்தர் பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டது விந்தையிலும் விந்தையல்லவா? நன்று! இறுதியாக, எம் வாசகர்களுக்கு தாங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எலியா: வெளி. 11 3இல் உள்ளவாறு ஏனோக்குடன். நானும் உங்களைச் சந்திக்க கர்த்தர் குறித்த நாளில் வர ஆவலாயிருக்கிறேன். நீங்கள் என்னிடத்தில் கற்றும், அடைந்தும். கேட்டும். கண்டும் இருக்கிறவைகள் எவைகளோ, அவைகளையே செய்யுங்கள். Relax but don’t retreat. நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பிற்குப் பாத்திரவான்களாய் நடந்து கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களோடிருப்பாராக!
நன்றி: தரிசனச்சுடர் மே 2024
No Comments