
12 Mar எழும்பிப் பிரகாசி
எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது..” (ஏசாயா 60.1). ஏசாயா தீர்க்கனின் இவ்வார்த்தைகள் தேவன் சொல்லியதைச் செய்யாமல் உதறித் தள்ளி, உதாசீனப்படுத்தி, தோற்றுப்போன இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் செயல்பட ஒரு தேவ கட்டளையாக (clarian call & command) வருவதைக் காண்கிறோம். தேவனின் புகழைச் சொல்லி வர வேண்டியவர்கள், அவர் பெயரைக் கெடுக்கும் வகையில் வாழ்ந்து விட்டார்கள். இன்றைய பெரும்பான்மைக் கிறிஸ்தவர்களின் நிலைமையும் இதுதானே! இருளான சமுதாயத்தில் தேவ தெரிந்தெடுப்புகள் (God’s Chosen one) முதுகெலும்பற்று (Compromised), சொதப்பலாக (Shoddy), அசதியாய் (Slumbered), ஆவிக்குரிய உணர்வற்றுப் (Spiritually insensitive) போய்விட்ட நிலைமையில் வாழ்வதைக் கண்கூடாகக் காண்கிறோம். நிற்க இயலாத கோழைகளாயினும் தேவ பெலத்தோடு எழும்பிப் பிரகாசிக்க வேண்டிய காலம் இது! நற்செய்திப் பட்டதாரிக்கும். மாணவனுக்கும், ஊழியனுக்குமான அழைப்பு இது!
அந்திரேயர் பெயருக்கேற்றாற்போல துணிச்சலான ஒரு மனிதன்தான். யோனாவின் குமாரன்; பேதுருவின் சகோதரன்; மீன் பிடிப்பவன்; யோவானின் சீடனாக மேசியாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தவன். இப்படிப்பட்ட பின்னணி கொண்ட உயிருள்ள சாட்சியாக வாழ்ந்த ஆதி அப்போஸ்தலனிடம் இருந்து ஒளி பாய்ச்சக் கற்றுக்கொள்வோமா?
சொந்த வீட்டில் பிரகாசித்தவன்
யோவான் ஸ்நானகன் சொன்ன வார்த்தையைக் கேட்டு அந்திரேயாவும் மற்றொரு சீடனும் இயேசுகிறிஸ்துவைச் சந்திக்கின்றனர் (யோவான் 1:37-39). உலக இரட்சகரோடு ஓரிரவு அவனது வாழ்க்கையையே ஒளிரச் செய்தது. 41ஆவது வசனத்தில் “அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு”. என வாசிக்கிறோம்.
ஆம்! தனது சாட்சியை முதலாவது தன் வீட்டிலேயே ஆரம்பிக்கிறான். அந்திரேயாவின் பேச்சு அவனது சகோதரனிடத்தில் எடுபடுவதைப் பார்க்கிறோம். பேதுருவும் இதன் விளைவாக இயேசுவைச் சந்திக்கின்றான். அந்திரேயா 5000 பேருக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவில்லை. ஆனால் தனது வீட்டில் சாட்சியாய் இருந்ததன் விளைவாக 5000 பேருக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும் பேதுருவை ஆயத்தப்படுத்தி விட்டான். இன்று அநேகர் ஊரெல்லாம், உலகமெல்லாம் சுற்றுவார்கள். ஆனால் சொந்தக் குடும்பத்தில் அவர்களது பேச்சு எடுபடுவதில்லை. காரணம் வீட்டில் சாட்சி இல்லை. “இவரைப் பற்றித் தெரியாதா?” என்ற மனப்பாங்கில் வீட்டில் திரி மங்கிக் கிடக்கிறது. நமது பேச்சை நமது பிள்ளைகளும், மனைவியும், உற்றார் உறவினர்களும் மதிப்பார்களேயாகில் அது ஒரு நல்ல சாட்சி. நமது குடும்பத்தார் நம் நல்ல சாட்சியை மதித்தால் அடுத்த வீட்டார் நம்மை மதிப்பர்.
இயேசுவின் ஒளி அந்திரேயாவின் மூலம் குடும்பத்தில் ஊடுருவி விட்டது.
விசுவாசிகள் நடுவில் பிரகாசித்தவன்
“போதகரே, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என ஆவலோடு வினவும் அந்திரேயாவின் வாழ்வில் ஒரு ஆவிக்குரிய தாகம் (Spiritual Thirst) இருப்பதைக் காணலாம். விசுவாசிகளில் அநேகருக்கு இன்று ஆவிக்குரிய தாகம் இல்லை.
ஆராதனை, பாடல் மற்றும் செயல்பாடுகளில் இருக்கும் ஆர்வம் ஆவிக்குரிய காரியங்களை அறிந்துகொள்வதில் இல்லை. யோவானின் பேச்சைக் கேட்டு இயேசுவை உடனே சந்திப்பதில் இருந்து அவனது கற்றுக்கொள்ளும் குணாதிசயம் (Teachablity) வெளிப்படுகிறது. “எனக்குத் தெரியும்” என்ற மனப்பான்மை சாட்சி வாழ்வை நிச்சயம் கெடுத்துவிடும்தானே!
அன்பு நண்பர்களே! விசுவாசிகள் மத்தியில் எரிந்து பிரகாசிக்க நமது குணாதிசயம் மிக மிக அவசியம்.
பவுல் அப்போஸ்தலன் தீமோத்தேயுவுக்குச் சொன்னது போல “விசுவாசிகளுக்கு” மாதிரிகளாக வாழ அழைக்கப்படுகிறோம். ஆவிக்குரிய தாகம், கற்றுக்கொள்ளும் மற்றும் தீர்வு காணும் மனப்பான்மைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
“மாணவ ஊழியத்தில் போதிப்பவர்கள் பெருகி விட்டனர். வாழ்ந்து காட்டுவோர் எண்ணிக்கையில்
சிறுகிக் கொண்டிருப்பது ஒரு கவலைக்கிடமான நிலைமை”
இன்றைய விசுவாச மாணவர்கள் நமது வாழ்விற்கும் வார்த்தைக்கும் உள்ள இடைவெளியை சரியாக்க க(வ)ணிக்கின்றனர். அவர்களை நாம் ஏமாற்ற இயலாது. பிரச்சனைகளைத் தெரிந்த பிறகும் அதையே பேசி வாழ்வதில் பயன் என்ன? அந்திரேயா போன்று தீரிவுகளைத் தருவோம். சாரமற்ற உப்பாக நாமும் நமது இயக்கமும் மாறும் முன் தேவனைச் சார்ந்து கொள்ளுவோம், ஐக்கியத்தில் பிரகாசிப்போம்.
சமுதாயத்தில் பிரகாசித்தவன்
யோவான் 6ஆவது அதிகாரத்தில் இங்கே ஒரு சிறு பையன் இருக்கிறான் (வ. 9) என்று சொல்லி சிறுவனை இயேசுவிடம் அறிமுகப்படுத்தும்போது அந்திரேயா பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் கண்ணோட்டம்
(Solution Oriented) உடையவன் எனப் புரிந்து கொள்கிறோம். அந்திரேயா 5000 பேருக்கு உணவளிக்க இயலாதவன். அவனது வரையறை அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே “இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்?” என்று கேட்டான். ஆனாலும் பிரச்சனைக்குள் தானும் இருக்க விரும்பாமல், தீர்வு காணும்படியாகத் தன்னிடம் உள்ளதை ஆண்டவரிடம் அறிமுகப்படுத்திய பண்பு மற்ற சீஷர்களுக்கு மத்தியில் அவனைத் தனித்துக் காட்டுகிறது. தனது கண்ணோட்டத்தால் 5000 பேருக்கு உணவளிக்கக் காரணமாயிருந்த சிறுவனை ஆண்டவரிடத்தில் அறிமுகப்படுத்தி வீட்டான். ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் சமுதாயம் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் துடித்துக்கொண்டிருக்கிறது. உறவுப் பிரச்சனைகள்,உளம் சார்ந்த பிரச்சனைகள் எனப் பட்டியல் நீலகிறது.
தேவனின் பிரதிநிதிகளாக நாம் தீர்வு காண உதவவே தேவன் நம்மை வைத்துள்ளார் என்ற உணர்வு நமக்கு வேண்டும். அந்திரேயா போன்று தீர்வுகளைத் தருவோம். சமுதாயத்தில் ஒளி பாய்ச்சுவோம்.
எல்லைகளைத் தாண்டிப் பிரகாசித்தவன்
யோவான் 12:20-23இல் வாசிக்கும் சம்பவத்தில், அந்திரேயா, கிரேக்க நாட்டினருக்கு இயேசுவை அறிமுகப்படுத்துவதைப் பார்க்கிறோம். இயேசுகிறிஸ்து உலக இரட்சகர். அவரது நற்செய்தி உலகமயமானது என்பதைப் புரிந்துகொள்ள அந்திரேயாவுக்கு வெகு நாளாகவில்லை. இந்த உலகளாவிய கண்ணோட்டம்
(Global Outlook) அந்திரேயாவைப் பின்னாட்களில் ஆசியா மைனர் மற்றும் கருங்கடல் சித்தியா பகுதிகளில்
கிரேக்க மக்கள் மத்தியில் சாட்சி பகர வாய்ப்பாக அமைந்தது தன் வாழ்நாளின் இறுதிவரை எழும்பிப் பிரகாசித்த அந்திரேயா x வடிவச் சிலுவையில் அவருக்காய் ரத்த சாட்சியாய் மரித்ததை வரலாறு தன் பொன்னேடுகளில் பொறித்து வைத்துள்ளது.
Daniel Mclean என்னும் வேத அறிஞர் அந்திரேயாவைப் பற்றிக் குறிப்பிடும் போது “அந்திரேயா நிருபம் எழுதவில்லை; சபையை ஸ்தாபிக்கவில்லை. அப்போஸ்தலர் மத்தியில் பிரசித்தி பெறவில்லை மாறாக, சத்தியத்தை உண்மையாய்த் தேடி. கிறிஸ்துவை நெருக்கமாய்ப் பின்பற்றி சாட்சியுள்ள சீடனாய் வாழ்ந்து காட்டி, மற்றவர் இம்மாபெரும் சந்தோஷ பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீரா ஆவல் கொண்டவனாய் வாழ்ந்து முடித்தான்” என எழுதுகிறார் என்னே ஒரு பிரகாசிக்கும் வாழ்வு!
அன்பு நண்பர்களே ! ஒரு பொருள் ஒளிர வேண்டுமெனில் வெளிச்சம் அதன் மீது பட்டாக வேண்டும்,
ஒளியின் பிரதிபலிப்பே அப்பொருளை மின்னச் செய்கிறது ஒளியின் ஊற்றாகிய நமதாண்டவர்
கிறிஸ்துவின் வெளிச்சம் நம்மீது படும்போது நாம் எழும்பிப் பிரகாசிக்கலாம். கிறிஸ்துவோடு நெருங்கி நடக்கும்
விசுவாச மாணவ, பட்டதாரிக்கு, ஊழியருக்கு இருள் நிறைந்த உலகில் பிரகாசிக்கும் வாழ்வு சாத்தியமே!
நன்றி : திருமதி கிளாடிஸ் லீ. 2018 நவம்பர் தரிசனச்சுடர்
No Comments