
30 Jan இலக்கை நோக்கி
பரிசுத்த பவுல் பிலிப்பியர் 3:14இல் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பந்தையப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் என்று கூறுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் பரலேகத்தில் நமக்காக வைக்கப்பட்டிருக்கும் பரிசைப் பெற்றுக்கொள்ள வெற்றிகரமான ஓட்டத்தை ஓடும்படி தேவன் நியமித்திருக்கிறார்.
ஓட்டத்தின் நோக்கம்
தேவன் நமக்கு மற்றுமொரு புதிய ஆண்டை நமது வாழ்வில் தந்தி ருக்கிறார். நாம் எதை நோக்கி ஓடுகிறோம் என்பதைக் குறித்து நமக்குத் தெளிவு வேண்டும். இந்த உலகத்தின் ஆசை, இச்சைகள் நம்மை ஆவிக்குரிய ஓட்டத்தை விட்டு வழிவிலக எத்தனிக்கின்றன. பிசாசானவன் வஞ்சித்து தந்திரமாக நம்மைத் திசை திருப்ப முற்படுகிறான். ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவர்கள் திசை மாறாமல் பரிசைப் பெற்றிட ஓடுவது போல் நாமும் கிறிஸ்தவ ஓட்டத்தை இலக்கை நோக்கி ஓட அழைக்கப் படுகிறோம்.
முதன்மையானவைகளுக்கு முதலிடம்
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்” (மத். 6:33) என்று கூறுகிறார். மேலும் தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள் என்று லூக்கா 12:31இல் கூறுகிறார்.
நமது வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுத்துள்ளோம்? தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவதே நம் வாழ்வில் முதன்மையானதாக இருக்கிறதா?
மேன்மையான அறிவு
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக் காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் (பிலி. 3:8) என்கிறார் பரிசுத்த பவுல். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவதையே மேன்மையாக எண்ணினார். ஆண்டவரைத் தொடர்ந்து பின்பற்றி அவரோடு நெருங்கிய உறவு கொள்வதன் மூலமாகக் கர்த்தரை அறிந்தார்.
தேவசித்தம் நிறைவவேற்றும் வாழ்வு
சுயசித்தத்தை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்து. தேவ சித்தம் அறிந்து அதை நம் வாழ்வில் செய்திட பவுலைப் போல ஆசை யாய்த் தொடருவோம். தேவன் நம்மைக் கொண்டு செய்ய சித்தம் கொண்ட பணியை ஆவலுடன் செய்து முடிப்போம்.
பின்பற்ற வேண்டிய முன்மாதிரிகள்
இந்த நவீன காலங்களில் பிரபலங்களைப் பின்பற்றுவது வழக்க மாகிவிட்டது. ஆவிக்குரிய உலகிலும் பிரபலங்கள் பெருகி வருகிறார்கள். விசுவாசிகள் இவர்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் போதனைகளைக் கூர்ந்து கவனித்து அவைகள் வேதாகமத்திற்கு ஒத்ததாய் இருக்கிறதா என்று ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். முரண்பாடுகள் இருப்பின் அப்படிப்பட்டவர்களின் போதனைகள் மற்றும் வாழ்க்கையை மாதிரியாய் வைத்துப் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
பிலிப்பியர் 3:17இல் பரிசுத்த பவுல், “சகோதரரே நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி…” என்று எழுதுகிறார். பவுல் சபை விசுவாசிகளைத் தன்னை முன்மாதிரியாக வைத்துப் பின்பற்றி நடக்கும்படி அறிவுறுத்துகிறார். வேதாகமத்திலே அநேக முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்த பரிசுத்தவான்களைக் குறித்து வாசிக்கிறோம். அவர்களின் மாதிரியைப் பின்பற்றி நாமும் நடப்போம்.
பரிசுத்த பவுல் நம்மை இவ்விதமாய் எச்சரிக்கிறார் “ஏனெனில் அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக் குப் பகைஞரென்றும், அவர்களுடைய முடிவு அழிவு” என்றும் பிலி. 3:18,19இல் கூறுகிறார்.
மேல்நோக்கிய பார்வையும் நம்பிக்கையும்
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது. அங்கிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம் (பிலி.3:20). இரட்சிக்கப்பட்டிருக்கிற ஆண்ட வருடைய பிள்ளைகளாகிய நம் அனைவருக்கும் பரலோகில் ஓர் இடத்தை ஆண்டவர் ஆயத்தம் பண்ணியிருக்கிறார் என்று யோபு 14:2,3இல் வாசிக்கிறோம். தேவன் நமக்குப் பிரதிபலனையும் தந்திட வாக்குப்பண்ணி யிருக்கிறார்.
நாம் பரலோகவாசிகள் என்பதை மறந்து இந்த உலக வாழ்க்கை யில் மேன்மையடைவதையே வாழ்வின் நோக்கமாகக் கொண்டு அநேகர் வாழ்கிறார்கள். இவர்கள் நித்திய வாழ்வில் நம்பிக்கை இழந்து காணப் படுகிறார்கள். பரிசுத்த பவுல் 1 கொரி. 15:19இல் இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் என்று கூறுகிறார். இந்த உலக வாழ்வு அநித்தியமானது என்று உணர்ந்த வர்களாய். நம் விசுவாசக் கண்களை ஏறெடுத்துப் பார்த்து பரலோகத்தில் தேவன் நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிற நித்தியமான வாசஸ் தலத்தையும், பந்தயப் பரிசையும் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுவோம்.
இந்தப் புதிய ஆண்டுக்குள் பிரவேசித்திருக்கிற நாம். தேவனுக்குப் பிரியமான. அவர் நாமத்திற்கு மகிமை சேர்க்கின்ற வாழ்வினை வாழ்ந்து, தேவன் அருளுகின்ற பந்தயப் பொருளைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக இலக்கை நோக்கித் தொடர்வோமாக.
நன்றி : தரிசனச்சுடர் ஜனவரி 2025
No Comments