
12 Nov இது நியாயமா?
நன்றாக தூங்கிக் கொண்டிருந்த ரூபனுக்கு கனவு வந்தது. நியாயத்தீர்ப்புக் கனவு அது. தேவ தூதன் ஜீவ புத்தகத்தைத் திறந்தார். கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார் ரூபனைப் பார்த்து,
தங்கள் பெயர் ரூபன்தானே?
ஆம். என் பெயர் ரூபன்தான்.
மனம் திரும்பி இருக்கீங்களா?
ஆம். ஓய்வு நாள் பாடசாலையில் என் வாழ்வை இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்தேன். விடுமுறை வேதாகமப் பள்ளியில் மனம் திரும்பினேன். இதுவரை பரிசுத்தமாய் கர்த்தருக்குப் பயந்து வாழ்கிறேன்.
அதனால்தான் உங்கள் பெயர் ஜீவ புத்தகத்தில் இருக்கிறது.
வாழ்த்துக்கள்! நீங்கள் பரலோகத்திற்குக் கடந்து செல்லலாம் என்று சொல்லவும், பரலோகத்திற்கு அழைத்துச் செல்ல தேவ தூதர்கள் வந்தார்கள்.
ரூபனுக்குப் பின் கேட்கப்பட்டன. கந்தசாமி வந்தார். கந்தசாமியிடமும் கேள்விகள்
உங்க பெயர் என்ன?
என் பெயர் கந்தசாமி.
இயேசு சாமி தெரியுமா?
கந்தசாமி சற்று முழித்து எனக்கு எந்த ஆசாமியையும் தெரியாது. இயேசுசாமியவும் தெரியாது. அது யாரு இயேசு சாமி என்றான்.
மனம் திரும்பி இருக்கீங்களா?
பணத்தைத் திருப்பி இருக்கிறேன். நகையைத் திருப்பி இருக்கிறேன் மனம் திரும்புவதா, அப்படின்னா என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
இரட்சிக்கப்பட்டு இருக்கீங்களா?
இரட்சிப்பா? சீப்பு தெரியும். சோப்பு தெரியும் அது என்ன இரட்சிப்பு? இதுவரை எந்தக் கடையிலும் இரட்சிப்பைக் குறித்து கேள்விப்பட வில்லையே? என்றான்.
அப்படி என்றால் உன் பெயர் ஜீவ புத்தகத்தில் இருக்க வாய்ப்பேயில்லை: நீங்கள் நரகத்திற்குச் செல்லலாம். நரகத்திற்கு உன்னை அனுப்புகிறேன் என்று சொல்லவும், இரண்டு பேர் கந்தசாமியை நரகத்திற்கு அழைத்துச்செல்ல வந்தார்கள்.
கந்தசாமிக்கு என்ன நடக்கிறது என்றே விளங்கவில்லை. கையைப் பிடித்துக் கந்தசாமியை தரதரவென்று இழுத்துக் கொண்டுசெல்லும்பொழுது . திரும்பிப் பார்க்கிறான் அந்தப் பகுதியில் ரூபன் பரலோகத்தின் வாசலை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை.
அந்த ரூபனை எங்க கூட்டிட்டு போறாங்க? நாங்க எல்லாம் ஒரே தெருதான்: ஒரே ஆபிஸ்தான். அவன் எங்க போறான்? என்று தன்னை இழுத்துச் சென்றவர்களிடம் கேட்டான்.
அவர் போகிற இடம் பரலோகம். அதான் சொர்க்கமுன்னு சொல்லு வாங்கள்ல, அங்க போகிறார். இயேசுவை ஏற்றுக் கொண்டு அவரைப் பின்பற்றினவர்கள். இயேசு தருகிற பாவ மன்னிப்பை பெற்றவர்கள். மனம் திரும்பியவர்கள் செல்லுகிற இடம்தான் பரலோகம். அங்கு தான் ரூபன் செல்லுகிறார்.
ஐயா. கொஞ்சம் நில்லுங்களேன். அந்த ரூபனை நீங்க கொஞ்சம் கூப்பிடுங்களேன் என்று சொல்லி தேவ தூதரிடம் கெஞ்சினான் கந்தசாமி. சரியென்று தேவ தூதனும் ரூபனை வரச் சொல்லி கந்தசாமி பேச அனுமதித்தார்.
ஐயா நானும் இந்த ரூபனும் ஒரே பள்ளியில் 12 ஆண்டுகள் படித்தோம்: கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் சேர்ந்து படித்தோம்; இப்பொழுது ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா சொல்வது. சாப்பாட்டு நேரம், டீ டைம் என்று எங்கே சென்றாலும் சேர்ந்தே செல்வோம், ஆனால் இதுவரை ஒரு நாள் கூட இயேசு கிறிஸ்து என்ற ஒரு தெய்வம் இருக்கிறார். அவரை ஏற்றுக் கொண்டால்தான் பரலோகத்திற்குச் செல்ல முடியும்; இல்லையென்றால் நீ நரகத்துக்கு செல்வாய் என்று இந்த ரூபன் என்னிடம் சொல்லவே இல்லை. இவன் மட்டுமல்ல எந்த கிறிஸ்தவர்களும் என்னிடம் சொல்லவேயில்லை. அப்படின்னா… ரூபன் மட்டும் எப்படி பரலோகத்துக்குப் போலாம்? எனக்கு மட்டும் நரகமா? இது நியாயமா என்று முறையிட்டான் கந்தசாமி.
கேள்வியின் நியாயத்தை உணர்ந்த தேவதூதன் ரூபன் என்ன சொல்றீங்க ? என்று கேள்வி கேட்க, தூங்கிக் கொண்டிருந்த ரூபனுடைய தூக்கம் கலைந்தது. வேர்க்க விறுவிறுக்க எழுந்து கடிகாரத்தைப் பார்க்கிறான் நடு இரவு ஒரு மணி. படுக்கையை விட்டு எழுந்து அங்குமிங்கும் அலைந்து நடந்து கொண்டிருந்தான். மனைவிக்கு சந்தேகம், ஏன் இந்த நடு ராத்திரியில் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்? திடீரென்று கதவை திறந்து வீட்டை விட்டு வெளியே ஓடினான் ரூபன். இதை பார்த்த மனைவி கணவன் நடு ராத்திரியில் இப்படி ஓடுகிறாரே என்று சொல்லி பயத்தில் ஏதோ நடக்கிறது என்று மனைவியும் ஓடினாள். பின்னால் அவனுடைய பிள்ளைகளும் ஓடினார்கள்.
எல்லாரும் எங்கே ஓடினார்கள் தெரியுமா? அந்தத் தெருவின் கடைசியில் உள்ள கந்தசாமி வீட்டுக்குத்தான். அந்த வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினான் ரூபன். “கந்தசாமி, கந்தசாமி… கொஞ்சம் வெளிய வாப்பா! ஒரு முக்கியமான செய்தியை சொல்லணும்” என்று சத்தமாக ரூபன் கந்தசாமியை அழைத்தான். ஏம்பா உனக்கு நேரம் காலம் கிடையாதா? என்ன புதுசா இந்நேரம் வந்து இந்த ராத்திரியில தொந்தரவு பண்ற? முக்கியமான செய்தி தூங்குற நேரத்துலயா வந்து சொல்லணும்? தூக்கத்தை விட முக்கியமான செய்தியா? என்று கந்தசாமி பதறிக்கொண்டே வெளியே வந்தார்.
முக்கியமான செய்திதான். இயேசுசாமி என்கிற ஒரு தெய்வம் இந்த உலகிற்கு 2000 ஆண்டுக்கு முன்பு வந்தார். பாவிகளாகிய நம்மை மீட்க வந்தார். அவரைத்தான் நாங்கள் வணங்கிட்டு இருக்கிறோம். அவர் உன்னையும் நேசிக்கிறார்; உன் குடும்பத்தையும் நேசிக்கிறார். உனக்காக சிலுவையிலே ரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்த ஆண்டவர். அவர் தருகிற பாவமன்னிப்பை. இரட்சிப்பை நீ பெற்றுக் கொண்டால் மாத்திரம் தான் பரலோகத்திற்கு. அதான் நீங்க சொல்ற சொர்க்கத்திற்கு செல்ல முடியும்; இல்லை என்றால் நீ நரகத்திற்குச் சென்று விடுவாய், நான் பரலோகத்திற்குச் சென்று விடுவேன். நீயும் அங்கு வர வேண்டும். இது வரை உன்னிடம் சொல்லாமல் இருந்ததற்கு என்னை மன்னித்துக் கொள். இப்போது சொல்லுகிறேன் தயவுசெய்து கேட்டுக்கொள். சொல்ல வேண் டியது என்னுடைய கடமை. தயவு செய்து இயேசு சாமியை ஏற்றுக்கொள் என்று சொல்லிவிட்டு ரூபன் கிளம்பத் தயாரானான். ஏம்பா இந்த செய்தியை சொல்லத்தான் இந்த நடு ராத்திரியில் வந்தாயா? என்று சிரித்துக் கொண்டே ஒன்றும் புரியாதவாறு படுக்கைக்கு சென்றான் கந்தசாமி.
தேவன் தந்திருக்கிற அழகான, அருமையான இவ்வாழ்க்கையை சரியான விதத்திலே பயன்படுத்திக்கொள். தேவன் உன்னை அழைக்கிறார். பள்ளி, கல்லூரி மற்றும் வேலை பார்க்கும் நாட்களிலேயே உன்னோடு பழகும் நண்பர்களுக்கு. தோழர்களுக்கு இயேசு கிறிஸ்துவை அறிவிக்கக்கூடிய அருமையான காலமாகும். இந்தக் காலத்தை இழந்து விடாதே. நாளைய தினத்தில் ரூபனைப் பார்த்து கந்தசாமி கேட்டது போல் இது நியாயமா என்று உன்னிடமும் கேள்வி கேட்டால் நீ என்ன சொல்லுவாய்? இப்பொழுது உன்னுடன் பழகுகிற உன் நண்பர்களே நாளைய தினத்தில் தலைவர்களாக, அரசியல்வாதிகளாக, ஏன் கிறிஸ்துவை எதிர்க்கிற வர்களாகக்கூட மாறிவிடலாம். அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிவிக்க இதுவே தருணம். ‘சுவிசேஷம் அறிவிப்பது என் மேல் விழுந்த கடமை. ஆண்டவர் தந்திருக்கிற இந்த திறந்த வாசல் அடைபடும் முன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம். நாம்தான் சத்தியம் அறிந்தவர்கள். இயேசுவை அறிந்தவர்கள். நாம்தான் அறிவிக்கக் கடமைப்பட்டவர்கள். அறிவிக்கப்படாவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்? ஆகையால் இன்றே ஆயத்தப்படுவோம். ஆண்டவரை அறிவிக்க. யாரோ ஒருவர் அறிவிப்பார்கள் என்று மற்றவர்களை எதிர்பார்க்காமல் இன்றே நாம் ஆயத்தப்படுவோமா!
நன்றி: தரிசனச்சுடர் ஆகஸ்ட் 2025
No Comments