
20 Aug மாற்றத்திற்கான பிரதிநிதிகள்
“Need changes” என்கிற முழக்கத்தோடு அமெரிக்க தேசத்தில் பாரக் ஒபாமா அவர்கள் வெற்றி பெற்று அமெரிக்க தேசத்தின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதே போல, எத்தனை மாற்றங்களை உருவாக்கிட எத்தனை பேர் முயற்சித்தாலும் அது பெரிய மாற்றத்தினை மக்களின் மனதில் உருவாக்கிட முடியாது. இன்றைய சமுதாயத்தில் மாற்றத்தோடு வாழ்பவர்களே கிறிஸ்தவர்கள். தாம் பெற்ற மாற்றம் சமுதாயமும் பெறவேண்டும் என சவாலோடு, அர்ப்பணிப்போடு வாழ்பவர்களே மாற்றத்திற்கான பிரதிநிதிகள் ஆவர்.
வேதாகமத்தில் காணப்படும் பிரதிநிதிகள் தங்களது வாழ்வில் கிறிஸ்துவை உடையவர்களாகவும், அழைப்பினைப் பெற்றவர்களாகவும், உண்மையுள்ள சீடர்களாகவும், மற்றவர்களின் மாற்றத்தினைக் கரிசனையோடு, பாரத்தோடு அணுக விரைந்திடுபவர்களாகவும், பின்னோக்காமல் இறுதிவரை களத்தில் போராடும் பிரதிநிதிகளாகவும் வலம் வந்தவர்கள்.
மோசே இஸ்ரவேல் ஜனம் எகிப்தில் பலத்தபோது, அடிமைகளாக நடத்தப்பட்டபோது மோசேயின் மனம் காயப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்களை மீட்பதற்காக மோசேயைப் பயன்படுத்திய கர்த்தரின் வல்லமையினை நேரடியாகப் பார்த்த தேவஜனம். முறுமுறுப்போடும், பின்நோக்கிச் சென்றும் இருந்தார்கள். மோசேக்கும் ஆண்டவருக்கும் இருந்த நட்புறவினால் மோசேயின் நாட்களில் இஸ்ரவேலின் எதிர்காலச் சந்ததியினருக்கு மிகப் பெரிய விடுதலையை மோசேயின் மூலம் கொடுத்தார். மோசேயைப் போல் நாமும் விடுதலை அளிக்கும் தேவனின் கருவியாகச் செயல்படுவோமா?
எஸ்தர்: ராஜாவாகிய அகாஸ்வேருவின் நாட்களில் தேசத்தில் யூதர்கள் மீது கொண்டு வரப்பட்ட அநீதியும், திங்கும். அழிவும் உண்டாக பிறப்பிக்கப்பட்ட மிகப்பெரிய கட்டளையை எஸ்தர் கண்டார். யூதரின் அழிவினைக் காணக்கூடாது என்று நினைத்தவர் எஸ்தர். உடனடியாக தான் பட்டத்து ராணி என்பதைக்கூட வெறுத்து, அதிகார வரம்பையும் மீறி தன் சொந்த ஜனம் மீட்கப்பட, காப்பாற்றப்பட முயற்சித்தாள். எஸ்தர் 4:16இன் படி “நான் செத்தாலும் சாகிறேன்” என்ற வைராக்கியம் எழுந்தது. கர்த்தர் எஸ்தரைக் கொண்டு மாபெரும் விடுதலையை யுத ஜனத்திற்குக் கொடுத்தார். இதன் மூலம், “இஸ்ரவேல் ஜனம் உலகம் முழுவதும் மகிழ்ச்சியினைக் கொண்டாடியது”. பாவ அடிமைத்தனத்திலிருந்து மக்கள் மீட்கப்படுவதற்கு எஸ்தர் என்ற பிரதிநிதி போல் நாமும் எழும்பலாமே?
பவுல்: உள்ளத்தில் மாற்றம் பெற்ற சவுலின் வாழ்க்கையில் வெளிச்சம் உதித்தது. அப்போஸ்தலர் 26:18இல் உள்ள வசனத்தின் பிரகாரம், ‘சாத்தானுடைய அதிகாரத்திலிருந்து தேவனிடத்தில் திரும்பும்படியாக… உன்னை அனுப்புகிறேன்” என்ற வார்த்தை சத்தியமானது. மாற்றம் பெற்ற பவுல் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக இழப்புகளைச் சந்திக்கிறார். மாற்றத்தின் பிரதிநிதியாக புற இனத்தவர் இயேசுவை அறிந்திட சுவிசேஷத்தினை சுமந்து திரிகிறார். வேதனைகளையும், உபத்திரவங்களையும் மேற்கொண்டார், சிரமேற்கொண்டு. சுவிசேஷத்தின் பிரதிநிதியாகச் செயல்பட்டார். அப்போஸ்தலர் 23:11இல் சொல்லப்பட்ட வார்த்தையின்படி தேவன் பவுலை எருசலேமில் சாட்சியாக நிலைநிறுத்தியதுபோல், ரோமாவிலும் சாட்சிபுரியவும், மாற்றத்தினை உருவாக்கவும் பயன்படுத்தினார். புறதேசத்திலும் நற்செய்தி கொண்டு செல்லும் தேவனது பிரதிநிதிகளாக நாம் செல்ல முற்படலாமே?
கேள்விப்படாத, சொல்லப்படாத, அறிவிக்கப்படாத இடங்களுக்குச் சென்று மாபெரும் தெய்வத்தின் அன்பினை அறிவித்திட அருட்பணியின் தூதுவராக, மாற்றத்தின் பிரதிநிதிகளாகச் சென்றிட முயற்சிப்போம். அர்ப்பணிப்போம்.
 
   
 	
No Comments