மெர்லின்

புயல் மாதிரி வண்டில பறக்கறேன்னு லிடியா ஆண்ட்டி போன வாரம் ஃபோன்ல சொன்னாங்க. டர்னிங்ல்ல நிதானமா ஓட்டு…

இவள் ஸ்கூட்டியில் கால் வைத்ததும் அம்மாவிடமிருந்து வந்த அட்வைஸ் இது.

ரம்யா தஞ்சாவூர் பஸ்ஸ மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு ஒரு நாள் கொஞ்சம் ஃபாஸ்ட்டா ஓட்டிட்டேன். இனி வழக்கம் போல நிதானமா ஓட்டுவேன்.

டர்ர்ர்… க்ளக்… க்ளிக்! சொல்லி வச்சுட்டு வந்தியா வூட்டுல..? மொகரயப் பாரு..! ஆட்டோக்காரரின் சடன் ப்ரேக்கில் இவள் முன்னால் சென்ற வண்டி உருளாமல், சிராய்ப்போடு நின்றது.

ஸாரின்ணா… மன்னிச்சிடு கெஞ்சுதலான அந்த பதிலில் அவன் சூடு குறைந்து வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

ஏய்… சிந்துதான நீ… வண்டியை நிறுத்தி குரல் கொடுத்தாள் இவள்.

ஆமா… நீங்க..?

ஏய்… நான் மெர்லின். உங்கூட சி.ஏ. க்ளாஸ் ட்யூஷன் வந்தேன். பாத்து ஓட்டு சிந்து. கொஞ்சம்னா ஆக்ஸிடெண்ட் ஆயிருக்கும்.

ஆமா நீ என்ன பண்ற, அப்பா அம்மா நல்லாருக்காங்களா?

அம்மா என்றதும் சிந்துவின் முகம் இருண்டது. அம்மா கொஞ்சம் சொகமில்லாம இருக்காங்க. இது என் நம்பர். உன் மொபைல்ல ஏத்திக்க… அப்புறம் பேசுறேன்.

நீண்ட இடைவெளிக்குப் பின் புதிய ஆரம்பம்.

மெர்லின் நுழைந்தபோது சிந்துவின் கலக்கமான முகம் அவளை வரவேற்றது.

கோ ஆப்ரட்டிவ் பாங்க்கில் க்ளார்க்காகப் பணியாற்றும் சிந்துவின் அம்மா கான்சரின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் மெடிக்கல் லீவு ஒரு வருஷம் போட்டுவிட்டார்கள். அப்பா, அம்மாவை விட்டுப் பிரிந்து வேறு குடும்பமாக இதே ஊரில்தான் வாழ்கிறார். சிந்து சுயநிதிக் கல்லூரியில் மாலைப் பிரிவில் உதவிப் பேராசிரியையாகப் பணி செய்கிறாள்.

பிழிந்து, பிழிந்து அழுதாள் சிந்து. அம்மாதாண்டி என் ஒலகம். தெனம் செத்து, செத்து பொழக்கறேன். அனாதயா நின்னுடுவேனோன்னு பயம் ஆட்டுது.

பயப்படாத சிந்து. உனக்காக நா தெனம் ஜெபம் பண்றேன். ப்ரச்னை இல்லாதவங்க யாரும் இல்ல. ப்ரச்னயை நாமே கையாள்றதவிட அத கடவுள்கிட்ட குடுத்தா, அவரு ஞானம், பெலம், ஒத்தாசை தருவாரு.

கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தா இப்டி எங்க வாழ்க்கைய அலைக்கழிப்பாரா?

கடவுளப் பத்தி சொல்றது சுலபம் மெர்லின். இந்த கஷ்டமான பாதையில நடந்து போறவுங்களுக்குத்தான் தெரியும் அவுங்க அனுபவிக்கிற காயம் எவ்வளவு கொடியதுண்ணு!

சிந்து, நான் அதுல நடக்க மட்டும் இல்ல, அதோட வாழுறேன். எனக்கு உங்காயம் புரியுது.

எப்படி என்பது போல் சிந்துவின் புருவங்கள் உயர்ந்தன.

அம்மாவோட கீமோதெரபி இந்த சைக்கிள் முடிஞ்சதும் எங்க வீட்டுக்கு வா. புறப்பட்டாள் மெர்லின்.

ஏனோ சிந்துவின் மனம் லேசாயிருந்தது மெர்லின் வரவால்.

அன்று சனிக்கிழமை. வாசலில் ஆட்டோ நின்றது. சிந்து அம்மாவோடு இறங்கினாள்.

ஆன்ட்டி வெல்கம்! பளீரென்ற சிரிப்புடன் வரவேற்ற மெர்லினைப் பார்த்தாலே பாதி வியாதி சரியாகி விடுமோ?

ஆன்ட்டி. இவுங்க என்னோட மம்மி.  ஜான்…! இவள் குரலுக்கு வீல்சேரில் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் வந்து ஹலோ சொன்னான்.

சிந்து, ஜான் என்னோட சித்தி பையன். மூணு வருஷத்துக்கு முன்னால கார் ஆக்ஸிடெண்ட்ல சித்தி, சித்தப்பா ரெண்டு பேரும் கடவுள்ட்ட போய்ட்டாங்க. ஜான் எனக்கு தம்பியா இங்க வந்துட்டான்!

அடப் பாவமே என்று சொல்லத் தோன்றிற்று சிந்துவிற்கு.

சிந்துவின் அம்மா மெல்லக் கேட்டார்கள், அப்பா என்ன பண்றாங்க மெர்லின்?

நாங்க பீஹார்ல கடவுள்பணி செஞ்சுகிட்டு இருந்தப்ப, மூளைக்காய்ச்சல்-ல பாதிக்கப்பட்டு இறந்துட்டாங்க. அப்ப மெர்லின் மூணு வயசுக் குழந்த- மெர்லின் அம்மா கூறினார்கள்.

சிந்துவும், அவள் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

ஏய் சிந்து, இதெல்லாம் ஜானோட பெயிண்டிங்ஸ். யு. எஸ் வரைக்கும் எக்ஸ்போர்ட் ஆகுதுன்னா பாத்துக்க அய்யாவோட மதிப்ப…! ஜான் புன்னகை பெரிதாகிக்கொண்டே போனது.

மெர்லின் என்ன ஜூஸ் இது… ரொம்ப நல்லா இருக்கு? ஆண்ட்டி, இது புதினா ஜூஸ்… மம்மி கை வண்ணம்! ஆர்த்ரட்டிஸ் வந்ததால அம்மா முந்தி மாதிரி பாட்டில், பாட்டிலா போட்டு ஃப்ரெண்ட்ஸ்க்கு குடுக்க முடியல. யாரோ காலிங் பெல்லை அடித்தனர். அங்க்கிள் உள்ள வாங்க. மம்மி… பிச்சைக்காரர் மறுவாழ்வு ஊழியம் செய்ற குணா மாமா வந்துருக்காங்க…!

ஆன்ட்டி, குணா அங்கிள்ட்ட பேசினீங்கன்னா ரொம்ப சாலஞ்சிங்கா இருக்கும். சூடான சமோசாக்களுடன் வந்தாள் மெர்லின்.

வீட்டுக்குள் நுழைந்த போது சிந்துவின் அம்மா முகம் தெளிவாயிருந்தது. சிந்து, நெக்ஸ்ட் மன்த் நான் ட்யூட்டி ஜாயின் பண்றேன்.

வேணாம்மா, இன்னும் ஒரு கீமோ போகணும், ரிவுயூ மீட்டிங்வேற போகணும்…

இல்ல சிந்து. மெர்லின் வீட்டுக்கு போய்ட்டு வந்தது தெம்பா இருக்கு. இவ்ளோ கஷ்டம், பாடு, கொறைஞ்ச வருமானத்ல திருப்தி. நிறைவா அவுங்க வாழ்றது சாத்தியம்னா… என்னாலயும் முடியும்ன்னு தைரியம் வந்துருக்கு!

அம்மா, அதுக்குக் காரணம் அவுங்க வணங்குற இயேசு கடவுள். கடவுள் எங்கூடவே எப்பவும் இருக்கார்ன்னு மெர்லின் அடிக்கடி சொல்லுவா. நாமளும் கூப்பிடுவோம்.

நாம கூப்ட்டா வராமலா போயிருவாரு இயேசு நாதர்? வருவார் என்று சிந்துவின் கண்கள் நம்பிக்கை கூறின.

நன்றி : தரிசனச்சுடர் 2020 ஜுலை

1 Comment
  • Santhosh Ganesan
    Posted at 18:12h, 28 June Reply

    Nice👍🏻

Post A Comment
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.