07 Aug மிஸ் பண்ணிட்டேனே!
நான் பெரிய தவறு பண்ணிட்டேன். கிருபையாய் ஒவ்வொரு முறையும், எனக்காக ,ஆண்டவர் முகாமை ஏற்படுத்துகிறார். முகாமில் தீர்மானம் எடுக்க, உதவி செய்கிறார். ஆனால் காலேஜூக்குப் போனதும், எல்லாவற்றையும் மறந்து வாழ்ந்திட்டேன்.
இப்ப கடைசியாகக் கலந்து கொண்ட முகாமில் தெளிவாக, என் தவறை, நான் உணர்ந்தேன். எனக்குக் கிருபையாய்க் கிடைத்த காலத்தை, வீணடித்து விட்டேன் என்பதைத் தெளிவாகப் புரிஞ்சுகிட்டேன்’’ என்று தங்கத்துரை கண்ணீரோடு, தன் ஜெப நண்பன் ஜாஷ்வாவோடு பகிர்ந்துகொண்டான்.
“இப்பவாவது புரிஞ்சுதேன்னு ஆண்டவருக்கு நன்றி சொல்லு’’ என்று பதிலுரைத்தான் ஜாஷ்வா. “இல்லடா, அவங்க செய்வாங்க, இவங்க செய்வாங்கன்னு மற்றவர்களை எதிர்பார்த்திட்டு, நான் செய்ய வேண்டிய பணியை, கடமையை, ஊழியத்தைச் செய்யல. அதான் இன்னும் காலம் இருக்கே என்று மெத்தனமா இருந்திட்டேன்.
மெத்தனத்தின் விளைவு, உண்மையான அன்புக்காக, ஏங்கிய, முத்துக்குருநாதனுக்கு உண்மையான இயேசுவின் அன்பை நான் காட்ட மறந்திட்டேன். அதனால, தவறான அன்பை நாடி, காதலில் விழுந்து, தோல்வியடைந்து, கொலைகாரனாய் ஜெயிலில் இருக்கிறான். கூடவே விடுதியில் தங்கியிருந்தும், அவனுக்கு உதவ முடியாமல் போய் விட்டதே!
அதுகூடப் பரவாயில்லை என் கிளாஸ்மேட் மணிகண்டன் போதைப் பழக்கத்துக்கு அடிமையாயிருந்து விடுபட முடியாமல் தவிச்சான். அவன்கிட்டப் போய், இயேசு கிறிஸ்துவால உன் போதைப் பழக்கத்திலிருந்து, விடுதலை தர முடியும் என்று சொல்ல, எனக்கு நேரமில்லாமல் போய்விட்டது.
விளைவு தற்கொலை பண்ணிக்கிட்டான். அவன் ஆத்துமாவை மீட்க, நான் ஒன்றும் செய்யல’’ என்று கண்ணீர் விட்டான் தங்கத்துரை.
“ஹலோ, இப்படிப் புலம்பிக்கிட்டு இருக்கிறத விட கிருபையாய் ஆண்டவர் தந்திருக்கிற மீதமுள்ள ஒரு வருஷத்தைச் சரியாய்ப் பயன்படுத்துவோம்’’ என்று கூறினான் ஜாஷ்வா. “ஏதாவது ஐடியா இருக்காடா?’’ – ஆர்வமாய்க் கேட்டான் கிதியோன்.
ஒன்னு செய்யலாம்டா, அடுத்த வாரம் உனக்குப் பிறந்த நாள் வருதுல்ல! உன் பிறந்த நாளில் நம் நண்பர்கள் எல்லாரையும் ஹாஸ்டலுக்குக் கூப்பிட்டு உன் ரூம்ல பார்ட்டி வைச்சு இயேசுவின் அன்பை அறிவி.
அதன் பின் உன்கிட்ட, ஆலோசனை கேட்டு வர்ற மாணவர்களை, ஜெபக்குழுவுக்கு அழைச்சிட்டு வா. அப்படி வர்ற சில மாணவர்களை, முகாமில் பங்குபெற வைப்போம் என்று அடுக்கிக்கொண்டே போனான் ஜாஷ்வா.
“ஆமாம் கிதியோன், இனி நமக்குக் கிடைக்கிற ஒவ்வொரு மணித்துளியும், நமக்கும் சரி, நம் மாணவ நண்பர்களுக்கும் சரி, “இலக்கை நோக்கி’ ஓடுகிற ஒட்டமா இருக்கட்டும்’’ என்று சொல்லி தங்கத்துரையும், ஜாஷ்வாவும் ஜெபக்குழுவில் கலந்துகொள்ளச் சென்றனர்.
Originally published in Tharisana Sudar, January 2019
No Comments