26 Jul நான் எந்தப் பழக்கத்திற்கு அடிமை?
தினமும் காலையில் வாக்கிங் போகும் ஒருவரை, அவர் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார் என்று சொல்வதில்லை. அதைப் போலவே, தினமும் காலையும் மாலையும் சரியாக ஆறு மணிக்கு, அவர் சரக்கடித்து மட்டையாகிவிடும் பழக்கத்தை, துல்லியமாகக் கடைப்பிடிக்கிறார் என்று பாராட்டவும் மாட்டோம்.
நாம் மீண்டும் மீண்டும் செய்பவை, நம் பழக்கங்கள் ஆகின்றன. நாம் அதிகம் விரும்புகின்றவைகளை, மீண்டும் மீண்டும் செய்வோம். ஆகவே பழக்கம் என்பது, விருப்பத்தின் அடிப்படையில் தான் ஏற்படுகிறது.
விருப்பமும், பழக்கமும் தொடர்புடையவைகளாக இருந்தாலும், அதிலும் விதி விலக்குகள் இருக்கின்றன. சில நேரங்களில் பிறரின் விருப்பத்துக்காக, நாம் ஒரு பழக்கத்தில் மாட்டிக் கொள்கிறோம்.
வியாபாரிகள் விளம்பரம் செய்து, நம்மை ஒரு பழக்கத்தில் மாட்டி விடுகிறார்கள். லாபத்தின் மீதுள்ள அவர்களது விருப்பத்தால், நாம் பழக்கங்களுக்கு அடிமைகளாகிறோம். வேறு வழியில்லாமல், பழக்கத்தில் மாட்டிக் கொள்வது நம்முடைய துரதிர்ஷ்டம்.
அப்பாக்களிடம் திட்டு மற்றும் உதை வாங்கி பழகிப் போன விளையாட்டோ , கலையோ இப்போது சோறு போடும் பலரை நான் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் அவர்கள் விரும்பாத பழக்கம், இப்போது அவர்கள் விரும்பும் புகழையும் பணத்தையும் கொண்டு வந்திருக்கிறது.
விருப்பத்துடன் செய்து தொடர்ந்த ஒரு பழக்கம், இப்போது உடலுக்கும், உள்ளத்துக்கும், உறவுகளுக்கும் பிரச்சனையாக இருப்பதால், விட்டுவிடத் துடித்தாலும், அதை விட்டுவிட முடியவில்லை.பழக்கங்களில் பல நல்ல பழக்கங்கள் தான். பழக்கங்களே நல்லது தான்.
ஸ்டீஃபன் காவி என்னும் பெரியவர் தனது 25 வருட ஆராய்ச்சியில், உலகத்திலேயே பிரபலமான சிறப்பான நபர்களின் வாழ்க்கைகளில் இருந்த பழக்கங்களைப் பற்றி , அலசி ஆராய்ந்து, 7 Habits of Highly Effective People என்ற பிரபலமான புத்தகத்தை எழுதினார். உலகப்புகழ் பெற்ற இந்தப் புத்தகம், இப்போது தமிழிலும் வந்துவிட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்தப் புத்தகத்தின் மூலம் பயனடைந்திருக்கின்றனர்.
பழக்கங்கள் மனிதர்களைத் தலைவர்களாக்கும் என்றால், தீய பழக்கங்கள் தலைவர்களைத் தரைமட்டமாக்கிவிடும் என்பது எதிர்மறையான உண்மை. பழக்கம் (Habit) மற்றும் அடிமைத்தனம் (Addiction) இரண்டுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி சிந்தித்தால், நம் கட்டுப்பாட்டில் இருக்கும் பழக்கங்கள் நம்மை அடிமைத்தனத்துக்கு (Addiction) கொண்டு செல்லாது.
ஆனால் பழக்கத்தின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கும்போது நாம் அடிமையாகிறோம் என்பது நமக்குப் புரியும். அடிமையாக இருப்பது எப்போதுமே நமது சுய மரியாதைக்கும் ஆறாவது அறிவுக்கும் எதிரானது.
போதையின் பாதிப்பு நம்மைத் தெளிவாக சிந்திக்கவிடுவதில்லை. தடுமாறுகிறோம், உளருகிறோம். நார்மலாக இருக்கும்போது செய்யாத பலவற்றை சாதாரணமாகச் செய்கிறோம். மனிதத் தன்மையே இல்லாத நிலையில் நம்மை நாமே அசிங்கப்படுத்திக் கொள்கிறோம்.
போர்னோ படங்கள் நிஜத்தைப் பற்றிய சித்திரத்தை குலைத்துப் போடுவதால், நம் மனம் சுத்தம் செய்யாத கார் கண்ணாடி போல, அழுக்கடைந்து போகும் வழி தெளிவாகத் தெரியாமல், எங்கோ போய் மோதிவிடும் கார் போல, வாழ்க்கை மாறிவிடுகிறது.
போதை மட்டுமல்ல. சில செயல்களும் கூட அடிமைத்தனத்தை நமக்குள் விதைத்துவிடுகிறது. போதைப் பொருட்களைப் போலவே, போர்னோ காட்சிகள் உங்களை அடிமைப்படுத்தும். பெண்களைப் போகப் பொருட்களாக நினைக்கும் ஒருவருக்கு காட்சிகள் தூண்டுதலாக இருக்கும்.
நான் ஒன்றும் யாருக்கும் தவறு செய்யவில்லையே, தனியாக உட்கார்ந்து எப்போதோ படம்பிடிக்கப்பட்ட காட்சிகளைத் தானே பார்க்கிறேன் என்பவர்களுக்கு எதிராக, ஒரு வாதம் இருக்கிறது. இப்படிப் பலர் பார்ப்பதால் தான் இந்தத் தொழில் வளர்ந்து கொண்டே போகின்றது.
இந்தத் தொழில் வளர்வதால் பல பெண்கள் கடத்தப்பட்டு, ஆபாசப்படத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தனிமையில் நான் செய்யும் ஒரு பழக்கம், எங்கேயோ ஒரு சகோதரியைப் பாலியல் தொழிலில் தள்ளிவிடுகிறது. பதின்ம வயதுப் பெண்களைக் கடத்திக் கொல்கிறது.
பொருளோ, செயலோ, காட்சியோ எதுவாக இருந்தாலும் அது உங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், பிறருக்கும் எந்த வகையில் தீமை செய்வதாக இருந்தாலும், அது அடிமைத் தனம் தான். ஏதாவது ஒரு பொருள் நமக்குள் டோப்போமைன்களை சுரக்கச் செய்து, ஒரு மாய உலகத்தில் மிதக்கச் செய்கிறது.
நாம் ஏதோ ஒரு செயலைச் செய்யும் போது, இதே மாய இனிமைத் திரவம், நமக்குள் ஒரு வித்தையைக் காட்டுகின்றது. இனிப்பை நிறுத்தமுடியாமல், உள்ளே தள்ளிக் கொண்டே போகிறோம், அந்த இனிப்பு கொழுப்பாக சேர்ந்து தொப்பை வெளியே தள்ளும் வரை, அளவுக்கு அதிகமான கொழுப்பு நமக்கு நல்லதல்ல என்பது எல்லோருக்குமே தெரியும்.
அதைப் போலவே ,நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இனிப்பைத் தவிர்க்கச் சொல்வார்கள் மருத்துவர்கள். இங்கேயும் கட்டுப்படுத்த முடியாத இனிப்பின் மீதான வெறி, உடலின் சில உறுப்புகளை வெட்டி எடுக்கும் அளவுக்குப் போய்விடுகிறது.
ஆறு சுவைகளும் நம் உணவில் சேர்வது நல்லது, அது தான்ஆரோக்கியம். ஒரு சுவையை மட்டும் அதிகம் சேர்ப்பது, சமநிலையைக் கெடுக்கும் என்கிறார்கள் உணவு சார்ந்த அறிஞர்கள்.
வாழ்வில் நமக்கு விருப்பமான ஒன்றை மட்டுமே தொடர்வதை விட, நமக்கு ஏற்படும் பல வகை அனுபவங்களை சந்திக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், நம் வாழ்க்கை ஆரோக்கியமாக, சிறப்பாக மாறிவிடும்.
நம் ஆள்த்தன்மையில் திரும்பத் திரும்பச் செய்யப்படும் விஷயங்கள் பழக்கமாகின்றன. பழக்கங்கள் நம் ஆள்த்தன்மையின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகின்றன.
நாற்பது நாட்கள் தொடர்ச்சியாக செய்யப்படும் ஒரு செயல், நமக்குப் பழக்கமாகிவிடுகிறதாகச் சொல்கிறார்கள். அதைப் போலவே, தொடர்ச்சியாக செய்யப்படாத, எந்த ஒரு பழக்கமும் விரைவில் மங்கிப் போய்விடுகிறது.
ஆறு அறிவு உள்ள ஒரு நபர் என்றால், “என் உடல் என் உரிமை” என்று சொல்வது போலவே, “என் உடல் என் பொறுப்பு” என்றும் சொல்வீர்கள் என்றால், நீங்கள் சரியான, சுதந்திரமான ஒரு வாழ்க்கை வாழுகிறீர்கள் என்று அர்த்தம்.
சுயநலம் எதில் இருக்கிறதோ , இல்லையோ, என்னைப் பாதுகாப்பதில், அதன் மூலம் பிறருக்கு சேவை செய்வதில், நான் சுயநலத்துடன் இருக்க வேண்டும். என்னைப் பாதுகாத்துக் கொள்ள நான் தான் பொறுப்பு.
அறம், ஒழுக்கம், நீதி என்பவற்றை நாம் வெளியில் இருந்து எதிர்பார்க்க முடியாது. நாம் தான் அவற்றைக் கொடுக்க வேண்டும். அதை நம் வாழ்விலிருந்து துவங்க வேண்டும்.
எல்லா தீய பழக்கங்களுக்கும் முடிவு என்ன என்பது, நம் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். களவும் கற்று மற என்று சொல்லும் பயமறியாத இளங்கன்றுகள், மறக்க முடியாமல் தடுமாறுவது தான் வாழ்க்கையின் சோகம்.
வாயில் புற்று நோய் வந்த ஒருவரின் படம் காட்டப்படும் போது, அது நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் நாயகன் புகை பிடிக்கும் போதும், அந்த நேரத்தில் ஓரத்தில் புகை பிடித்தல், உடல் நலத்துக்குத் தீங்கானது என்று ஒரு விளம்பரம் வருவது யாரை ஏமாற்றுவதற்கு என்று தெரியவில்லை.
நம் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும், அதற்கேற்றபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் நம் உரிமை. நம் பொறுப்பு.
நான் ஒன்றும் குடித்துவிட்டு ரோட்டில் உருண்டு கொண்டிருக்கவில்லையே என்று நீங்கள் சொல்லலாம். எப்போ வேணும்னாலும் இந்தப் பழக்கத்தை விட்டுவிடுவேன் என்று சொல்லலாம்.
ஆனால் பழக்கங்கள் நாய்க்குட்டிகள் போலத் தோன்றினாலும், அவைகள் முடிவில் நம்மையே விழுங்கிவிடக் கூடிய டைனோசர்கள் போன்றவை.
உங்கள் சமூக வலைத்தளப் பழக்கங்களோ, நேரத்தை வீணடித்து, உறவுகளைத் தவிர்க்கும் வேறு எந்த விதமான ஆரோக்கியமற்ற பழக்கங்களோ, உங்களை சிறிது சிறிதாகப் படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.
No Comments