
06 Dec நன்றி பலி…
தேவனை நோக்கி தினமும் ஜெபிக்கிறோம். அதுபோல மாணவர் ஊழியங்களுக்காக ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு மற்றும் எல்லாச் செவ்வாய்க்கிழமைகளிலும் உபவாசித்து ஜெபிக்கிறோம். ஆனால் ஜெபத்தில் துதி, நன்றி, ஆராதனை என மூன்று செயல்கள் அடங்கியுள்ளன என்பதைப் பல வேளைகளில் மறந்துவிடுகிறோம். பலசரக்குப் பட்டியலை மளிகைக் கடைக்காரனிடம் வாசிப்பதைப் போன்று நமது தேவைகளுக்கு மட்டும் முதலிடம் கொடுத்து, மற்றவைகளை விட்டுவிடுகிறோம். அகிலத்தையும், படைத்தவர், பாதுகாத்து வருபவர், பரிசுத்தர். அவர் சர்வவல்லவர் என்பதை உணர்ந்து பயத்தோடும், நடுக்கத்தோடும் துதிகளை ஏறெடுக்க வேண்டும். துதி, நன்றி. ஆராதனை மூன்றிற்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். தமிழ் வேதாகமத்தில் நன்றி (Thanks) என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘ஸ்தோத்திரம்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான் (சங். 50:23), நன்றி சொல்வதால் நாம் தேவனைக் கனம் (Honour) பண்ணுகிறோம். மகிமைப்படுத்துகிறோம் (Glority). தேவன் அளித்த ஆசீர்வாதங்களை மறவாமல், நினைவு கூர்ந்து நன்றி சொல்வோம்.
மறக்காமல் நன்றி கூறு
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் பத்து தொழுநோயாளிகள் வந்தனர். அனைவரும் சுகம் பெற்றனர். ஆனால் அவர்களில் ஒருவன் மட்டும் திரும்பி வந்து இயேசுவிடம் நன்றி கூறினான். அப்போது இயேசு சொன்னார் “சுத்தமானவர்கள் பத்துபேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக் காணோமே (லூக்கா 17:17.18), நமது தேவைகளுக்காக மீண்டும் மீண்டும் ஊக்கமாக வேண்டுகிறோம். ஆனால் தேவைகள் சந்திக்கப்பட்ட பின், நன்மையைப் பெற்ற பின். ஓரிரு முறை மட்டும் நன்றிகூறி பின் மறந்து விடுகிறோம். தொடர்ந்து நன்றி பலியை ஏறெடுப்போம்.
நன்றிபலி காணிக்கை
பழைய ஏற்பாட்டில் நன்றிகூறுவது என்பது ஆண்டவருக்குப் பலி செலுத்துவதாகும். இயேசு கிறிஸ்து தம்மையே நமக்காய்ப் பலியாக்கினதால் இனி நாம் பலி செலுத்தத் தேவையில்லை. நன்றி உள்ளம் கொண்டவர்களாக காணிக்கைகளைச் செலுந்துவோம். நம்மையும், நமது உடமைகளையும், வருமானத்தையும் அவரின் பணிக்குத் தாராளமாகக் கொடுப்போம். நன்றி நிறைந்த உள்ளத்தோடு நிறைவாய்க் கொடுப்போம்.
எழுதிவைத்து எண்ணி எண்ணி நன்றி கூறுதல்
பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த உதவிகளை வருடத்திற்கு ஒரு முறையாவது நினைவுகூர்ந்து, நன்றி கூறுவதையும், ஒரு சிறு பரிசு கொடுத்து மகிழ்விப்பதையும் எங்கள் வாழ்வில் அனுபவித்து வருகிறோம். தேவன் நமக்குச்செய்த எண்ணற்ற ஆசீர்வாதங்களைக் குறித்துவைக்க வேண்டும். நாம் கடந்துவந்த பாதைகளைத் திரும்பிப்பார்க்க வேண்டும். அக்கிரமங்களை மன்னித்து, நோய்களையெல்லாம் குணமாக்கி. ஆத்துமாவை நித்திய அழிவிலிருந்து மீட்டு கிருபையினாலும். இரக்கங்களினாலும் முடிசூட்டி, அபயக்குரல் கேட்டு ஆபத்தில் தப்புவித்து. நீதியின் ஆடையை உடுத்துவித்து. தூய ஆவியானவரைத் துணையாளராகத் தந்து, இயேசுவின் புண்ணியங்களை அறிவிக்க நீடித்த ஆயுசு நாட்களைக் கட்டளையிட்டு… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். என் ஆத்துமாவே! எண்ணி எண்ணி கர்த்தருக்கு நன்றிகூறு.
புகழ்பாடி நன்றி கூறுதல்
எனது ஜெபக்குழுவில் (EGF) நேயர் விருப்பம் எனக் கேட்டால் உடனே பாடுவோம் நற்செய்தியை பாடல் புத்தகத்தின் பாடல் எண் 102 என்று கூறுவேன்.
“நடத்தின விதம் நினைத்தால்
நன்றி சொல்லாமல் இருப்பேனோ… என்னை”
பாடல் பாடி நன்றி கூறுவோம். ஆண்டவர் செய்த அதிசயங்களையும், அற்புதங்களையும் வழிநடத்துதல்களைம் தியானித்து மற்றவர்களிடம் விவரித்துப் பேசுங்கள். அவரின் புகழைச் சொல்லி வருவதும் நன்றி செலுத்துவதாகும்.
தினையளவு நன்மை பெற்றாலும், அதைப் பனையளவாகக் கருதி நன்றிகூற வேண்டும். கசப்பை. நன்றல்லாததை அன்றே. சூரியன் மறைவதற்குள் மற. ஆனால் நன்றி மறப்பது நன்றன்று.
ஆண்டின் இறுதியில் அல்லது துவக்கத்தில் ஓரிரு நாட்கள் தேவசமூகத்தில் அமர்ந்திருந்து அவரின் மெல்லிய சத்தத்தைக் கேட்போம். இன்னும், நம்மிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் பழைய மனிதனின் சாயலைக் களையெடுத்து. நன்றி நிறைந்த உள்ளத்தோடு, தேவனுக்குப் பிரியமான பலிகளைச் (எபி. 13.16) செலுத்துவோம்.
நன்றி : தரிசனச்சுடர் 2021 டிசம்பர்
No Comments