
08 Oct படமும்… பாடமும்…
‘இதுவரை திரையில் மட்டுமே கண்டு. ரசித்து, கட் அவுட்களில் பாலாபிஷேகம் செய்து ஆராதித்த என் மானசீகத் தலைவனைக் கைக்கு எட்டும் தூரத்தில் இன்று பார்த்துவிட்டேன். இதற்கு மேல் என்ன வேண்டும் எனக்கு!’
‘ரேம்ப்புக்கு அருகிலேயே தவம்கிடந்து குறி பார்த்து நான் எறிந்த துண்டை என் தலைவன் லாவகமாகக் கேட்ச் பண்ணி. தன் கழுத்தில் போட்டுக்கொண்டு கையசைத்துத் துள்ளிச் சென்றாரே! யாருக்குக் கிடைக்கும் இப்பாக்கியம்!”
‘பவுன்சர்களைத் தள்ளி முண்டியடித்து என் தலைவர் கிட்டச் சென்று. இதோ அவரை நான் தொட்டுப் பார்த்துவிட்டேன்! என் இலட்சியம் அல்லவா இன்று நிறைவேறியது!’
‘அவர் எங்களை நோக்கி வீசிய துண்டை எகிறிக் குதித்துக் கேட்ச் பிடித்தேன். அது இப்போது என்னுடைய கைகளில்! இதை நான் என்றென்றும் பத்திரமாக வைத்திருப்பேன்!”
இப்படத்தின் பின்னால் உள்ள கதைகள்தான் எத்தனை!
மனக்கண்களில் கொண்டு வருவோமா மற்றொரு படக்காட்சியை…
‘இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் அவரை எப்படியாவது இன்று பார்த்துவிட வேண்டும் என்ற பேராவல் என்னை உந்தித் தள்ளியது. எனவே என்னுடைய செல்வம், பதவி, அந்தஸ்த்து இவைகளெல்லாம் ஒரு பொருட்டாகவே எனக்குத் தோன்றவில்லை. ஒருவர் கண்ணிலும் பட்டுவிடாமல் அவர் நடந்து வரும் வழி அருகேயிருந்த மரத்தில் ஏறிஇலைகளுக்கிடையே மறைந்திருந்து அவரைப் பார்ப்பதற்கு வகை தேடினேன். அருகே வந்த அவர் சற்றே நின்றார். அண்ணாந்து பார்த்தார். என்ன ஆச்சரியம்! என்னைப் பெயர் சொல்லிக் (எப்படித் தெரியும்?) கூப்பிட்டு, ‘நீ சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்’ என்று சொன்னாரே. இவரல்லவா தேடி வந்த தெய்வம்: என் இரட்சகர். என் எல்லையில்லா மகிழ்ச்சியை என்னவென்று சொல் வேன்!’ (லூக் 19:1-9)
-இது சகேயு.
‘நான் வீட்டுக்குத் தூரம் என்பது உண்மைதான். ஆனால் அவர் ஒன்றும் எனக்குத் தூரமானவர் அல்லவே. என்னிடத்தில் வருகிற ஒருவரையும் நான் புறம்பே தள்ளுகிறது இல்லை என்றல்லவா அவர் சொல்லி இருக்கிறார். அவரைச் சுற்றிப் பவுன்சர்கள் போலத் திரள் கூட்டம். ஆனால் எனக்கு அது ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. அன்றைய சட்ட திட்டங்களாலும் என்னைத் தடுக்க முடியவில்லை. ஆம். நான் பட்ட வேதனைகளும், அவரைக் குறித்துக் கேள்விப்பட்ட என் உறுதியான விசுவாசமும் என்னை உந்தி தள்ளின என்பதே உண்மை. முண்டியடித்து அவரை நெருங்கி… ஆம். அவரை… அல்ல அல்ல. அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத்தான் தொட்டேன். அவ்வளவுதான்… என்ன நடந்தது? பன்னிரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து என்னை மிகவும் வேதனைப் படுத்தி வந்த உதிரப்போக்கு ஒரு கணப்பொழுதில் முற்றிலும் நின்று போயிற்றே!
What a mighty wonderful God! (மத்தேயு 9:20-22; மாற்கு 5:25-34: லூக்கா 8:43-48).
-இது பெரும்பாடுள்ள ஸ்திரீ.
‘பார்வையற்ற நான் திரளான மக்கள் நடக்கிற சத்தத்தைக் கேட்டு ‘இதென்ன என்று விசாரித்தேன். இயேசு போகிறார் என்றார்கள். சிறுவயதில் என் பெற்றோர் கற்பித்து இருந்ததால் ‘இயேசுவே. தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டேன். பாதுகாவலர்கள் போலச் சூழ்ந்திருந்த சீஷர்கள் என்னை அதட்டினார்கள். நானோ இன்னும் அதிக உரத்த சத்தமாய்க் கூப்பிட்டேன். இப்போது அவரே கூப்பிடுகிறதாக என்னை அதட்டியவர்களே அழைத்தார்கள். பிச்சைக்காரனுக்குரிய என் மேலாடையைத் தூக்கி வீசி எறிந்தேன். இயேசு என்னிடம் ‘உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது’ என்று பாராட்டினார். புருவங்களை உயர்த்தி இவ்வுலகை இப்போது வியந்து பார்க்கும் எனக்கு இதைவிடப் பெரும் பேறு வேறென்னவாக இருக்க முடியும்! இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (லூக்கா 18:35-43).
-இது பர்த்திமேயு
இளைய சமுதாயமே! இள வயதும், வாலிபமும் மாயையே!
நன்றி: தரிசனச்சுடர் அக்டோபர் 2025
No Comments