
27 Mar அழிவின் விளிம்பில் பிழைக்க அழைப்பு
ஓடினான்
அந்நாட்டில் மூன்று ஆண்டுகள் மழை மறைந்தது: ஜனம் துவண்டது. தேசம் நாசமாகக் காரணம் அரசன் மெய்யான தேவனை விட்டுவிட்டதும் புறதெய்வ சிலை வழிபாட்டில் ஈடுபட்டதுமே. தேசத்துக் குடிமக்கள் கொடும் பசியின் பிடியில் மடிந்து கொண்டிருக்கையில் சிலை வணக்கக் கொடியவருக்கு முடிமன்னன் மாளிகையில் அறுசுவைவிருந்து தினமும் கொடுத்தது மிகக் கொடுமை. அந்த அரசனைக்கண்டு மிரண்டு விடாமல் பரமனின் வார்த்தைகளை எரிமலையாகத் தெறிக்க விட்டான் ஒரு மாவீரன். மன்னனின் கண் முன்னே விண்ணிலிருந்து தீப்பிழம்பைப் பலிபீடத்தின் மாமிசத் துண்டுகள் மேல் இறங்கச் செய்து இறை அருளால் உண்மையான கடவுளின் இறையாண்மையை நிரூபித்துக் காட்டினான். போலியான தெய்வங்களின் பெயரால் தம் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்த பூசாரிக் கூட்டத்தைத் தோலுரித்துக் காட்டிய பின்னர் அவர்களைக் கூண்டோடு அழித்தான் அந்த இறைவாக்கு உரைப்போன். இச்செய்தி கேட்ட அரசி என்ற அரக்கி உன் உயிரை எடுப்பேன் என்று சூளுரைத்தாள்.
உயிருக்குப் பயந்து ஒரு நூறு மைல் தொலைவு விரைந்து சென்று நாட்டின் தெற்கு எல்லை தாண்டி வனாந்தரத்தில் ஒளிந்திருந்து தன்னைக் காப்பாற்ற முனைந்தான். கடந்த கால நிகழ்வுகளை கடவுள் செய்த
வியப் பூட்டும் மகத்துவங்களை வறட்சியின் நெருக்கத்தில் உணவளித்து உயிர் காத்த பரமனின் பரிவையும் பராக்கிரமத்தையும் மறந்து விட்டு தன்னைக் காத்துக்கொள்ளத் தானே முயன்றான்.
அச்சம் ஒரு மனிதனின் அறிவை முறித்துப் போடுகிறது. சீர்தூக்கி சிந்திக்கும் திறனை முடக்கிப் போடுகிறது. அவன் சிந்தை முழுவதையும் ஆட்கொண்ட ஒரே எண்ணம் மகாராணி என்னைப் பிணமாக்கி விடுவாள்.
ஆதிக்கமும் ஆணவமும் நிறைந்தோரின் எதிர்ப்பு எவரையும் எளிதில் நிலை குலையச் செய்துவிடும். உண்மையில் அவன் பயந்திருந்த அந்தப் பெண்மணி விண்ணரசரின் முன்பாக வெறும் மண்பாண்டம் என்பதை மறந்து விட்டான.
நாடினான்
மனம் தளர்ந்து உள்ளம் உடைந்து கடவுளை அண்டி னான் ஒரு விசித்திர விண்ணப் பத்துடன். தான் வாழ்ந்தது போதும் என்னை எடுத்துக்கொள்ளும் என்று மன்றாடினான். உயிரைக் காக்கும் நோக்குடன் ஓடி ஒளிந்து கொண்டவன் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தான். நான் வாழ்ந்தது போதும் என்னை எடுத்துக் கொள்ளும் என்று மன்றாடினான்; என் முன்னோரிலும் நான் நல்லவன் அல்ல என்று காரணமும் கூறிவிட்டான். உருவத்திலும் பொறுப்புகளிலும் கல்வியிலும் செல்வத்திலும் மற்றோர் போல இல்லை என்று தன்னை மட்டம் தட்டுவது தாழ்வுணர்ச்சியின் தூண்டுதல், தோல்வி உணர்வும் தாழ்வு உணர்ச்சியும், அவன் கழுத்தை இறுக்கிப் பிடிக்கத் துடித்தன. நான் ஒருவன்மாத்திரம் ஒரு பக்கத்தில் இந்த முழு உலகில் வேறு யாரும் என்னுடன் இல்லை என்ற தனிமை உணர்வு அவனைக் கொன்றுகொண்டிருக்கிறது.
தேடினார் அவர்
வாழ்வைத் துறக்கத் துணிந்து ஒரு புதரின் நிழலில் சுருண்டு கிடந்த தேவ மனிதனைத் தேடி தேவ தூதன்
இறங்கி வந்தான். தட்டி எழுப்பி பசியால் களைப்பு நிறைந்திருந்த உடலுக்கு உணவளித்து பலப்படுத்தி
அழிவின் விளிம்பிலிருந்த அவனைப் பிழைக்க வைத்தான். இன்னும் நடக்கச் செய்து தன்னையே அவன்
கண்டு மகிழும்படி தம்மை வெளிப்படுத்தினான். அவனைத் தேடி வந்த தெய்வம் அவன் செய்து முடிக்க வேண்டியவற்றை அவனுக்குக் கோடிட்டுக் காட்டினார். அவனுக்குப் பின் அந்நாட்டில் தெய்வ சேவையில்
தொடர்ந்து இருக்க மற்றொரு தீர்க்கனை உலகுக்கு அடையாளம் காட்டுவது; தாய் நாட்டை ஆளும்படி தேவன் காட்டிய அடுத்த அரசனை எடுத்து நிறுத்துவது; அண்டை நாட்டின் அரசனையும் மாற்றி வைப்பது என மாபெரும் பணிகள் காத்திருந்தன. எனினும் தீர்க்கமான அடையாளம் காட்டிய அவனுக்கு சரீரத்தின் மரணத்தை ருசிக்காமல் நேரடியாக மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு வித்தியாசமான முடிவை வைத்திருந்தார் என்பது வியப்பளிக்கிறது அல்லவா?
பிரிய வாசகரே, மலையென நினைத்து நாம் மலைத்து நோக்கும் சில தொல்லைகள் சல்லிகளாக உருமாறி விலைக்கு வந்து கிடக்கும் நாட்கள் தொலைவில் இல்லை.
எத்தனை முயன்றும் இந்தத் தேர்வை வெல்ல முடியவில்லை இந்தப் பணியில் சேர முடியவில்லை அந்த இலக்கை எட்ட முடியவில்லை என்று தோல்வியின் தாக்கத்தால் துவண்டு கிடப்போர் உண்டு. ஆன்மீக வாழ்வில் எடுத்த நிலைப்பாட்டில் நிற்க முயன்று சரிந்து விழுந்து தோற்று நிற்போர் உண்டு. எனக்கென்று பரிந்து பேசவும் என்னைப் புரிந்து கொள்ளவும் யாருமே இல்லை. நான் ஒரு தனி மரம் என்று தன்னை மாத்திரம் பார்த்துக்கொள்ளும் குறுகிய பார்வை நம்மை வாழ விடாமல் தடுத்துவிடும்.
பிரியமானவர்களே, அரிய பெரிய காரியங்களை உங்கள் மூலமாகச் சீரிய முறையில் செய்து முடிக்க தேவன் பிரியமாய் இருக்கிறார். உலகை விட்டுக் கடந்து செல்கையில் உயரச் சென்று அவரோடுகூட அழிவில்லா வாழ்வை வாழ்வது அவர் நமக்கு அளிக்கும் பரிசு. அதற்காகவே தோல்வியிலும், தாழ்வு உணர்விலும், தனிமை தாக்கத்திலும் வாழப் பிடிக்காமல் துவண்டு கிடப்போரை பிழைக்கும் வழிகாட்டி அவர் அழைக்கிறார். அந்த அழைப்பின் குரல் கேட்டு அவர் தரும் வாழ்வை ஏற்றுக்கொள்வீர்களா?
நன்றி : தரிசனச்சுடர் அக்டோபர் 2025
No Comments