சந்திப்பில் ஒரு சந்திப்பு

         பயணிகளின் அன்பான கவனத்திற்கு! கோயம்புத்தூரிலிருந்து திண்டுக்கல் வழியாக மதுரை செல்லும் தொடர்வண்டி எண் 25621 இன்னும் சற்று நேரத்தில் நடைமேடை மூன்றிலிருந்து புறப்படும் அறிவிப்பு ஒருபுறம் அலறிக்கொண்டிருந்தது.

சரி தம்பிகளா. போய்ட்டு வர்றேன். இது நமக்குள் ஏற்படும் தற்காலிகமான பிரிவு மட்டுந்தான். நாம் சீக்கிரமா சந்திக்கலாம் ஓர் அன்பின் குரல் ஒலித்தது.

சுமார் 25 முதல் 30 மாணவர்கள் அவரை சூழ்ந்துகொண்டு பிரிய மனமில்லாமல் அந்த கடினமான சூழ்நிலையோடு யுத்தம் செய்து கொண்டிருந்தனர். அனைவரின் கண்களிலும் பேரன்பும். எதையோ இழக்கப்போகும் ஏக்கமும் பெருகிக்கிடந்தன என்று சொன்னால் யாராலும் நம்பத்தான் முடியுமோ?

சாமுவேல் அண்ணன் கலங்கிய கண்களோடு. கனத்த இதயத் துடன் தன் ரயில் பயணத்தைத் தொடங்குவதற்கு அப்படி என்னதான் காரணங்கள் இருந்துவிடப் போகிறது?

நாகராஜன் ஒரு ஜெபக்குழு மாணவன். சாமுவேல் அண்ணனின் வீட்டில் நடக்கும் ஜெபக்குழுவில் வாரந்தோறும் தவறாமல் கலந்து கொள்வான். அன்றொரு நாள் ஜெபக்குழுவில் அவன் எந்தவித உற்சாக முமின்றி அமைதியாகக் காணப்பட்டான். உன்னை நேசிப்பது போல நீ பிறனையும் நேசிக்க வேண்டும் என்பதே அன்றைய நாளின் மையச் செய்தி. இறுதி ஜெபம் செய்வதற்கு முன்பாக சாமுவேல் அண்ணன் ஜெபக்குறிப்புகள் ஏதேனும் உண்டா என கேட்டார். அனைவரும் ஒவ் வொரு குறிப்பைக் கூற, நாகராஜன் மட்டும் ஒன்றுமில்லை என்று கூறி னான். பிறகு அனைவரும் பேசி சிரித்துக்கொண்டு ஐக்கியத்தை மகிழ்ந்து கொண்டிருக்க, நாகராஜன் மட்டும் சில வேலைகள் இருப்பதாகக் கூறி விட்டு விடுதிக்குச் சென்றுவிட்டான்.

இயேசுவை மாற்றுப் பின்னணியிலிருந்து சாமுவேல் அண்ண னின் ஜெபக்குழு மூலமாகப் பற்றிக்கொண்டவன்தான் நாகராஜன். ஏழைக் குடும்பம் என்பதால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை. மறுநாள் செமஸ்டர் தேர்வு. கட்டணம் செலுத்தாமல் ஹால் டிக்கெட் வழங்கப்படாது என்பது கல்லூரி முதல்வரின் கட்டளை. இதுவே அவனுடைய எதிர்பாரா அமைதியின் காரணம்.

மறுநாள் காலை தனது வகுப்பறையில் செய்வதறியாது அமர்ந்திருந்தான் நாகராஜன். டேய். நாகா! இங்கே என்னடா பண்ற. உன்னை தர்ஷினி மேடம் ஸ்டாஃப் ரூமுக்கு வந்து ஹால் டிக்கெட் வாங்கிக்க சொல்லிருக்காங்க. சீக்கிரம் போ. தேர்வு தொடங்கப்போகுது. ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஓடிச்சென்று அனுமதி சீட்டைப் பெற்றுக்கொண்டு முதல்நாள் தமிழ்த்தேர்வை வெற்றிகரமாக முடித்து விட்டான். தேர்வு முடிந்தவுடன் தர்ஷினி மேடத்தை சந்தித்து. யார் அவனு டைய கல்லூரி கட்டணத்தை செலுத்தியது என்று ஆர்வத்தோடு கேட்டான். சாமுவேல் அப்படினு ஒருத்தர் வந்தாரு. உன் அண்ணன்னு சொன்னாரு என்று கூறிவிட்டு தர்ஷினி மேடம் கடந்து சென்றார். உன்னை நேசிப்பது போல நீ பிறனையும் நேசிக்க வேண்டும் என்ற முந்தைய நாள் செய்தியை சாமுவேல் அண்ணன் கொடுத்ததை நினைவுகூர்ந்த நாகராஜனின் கண்கள் கலங்கியது. அன்று அவன் சாமுவேல் அண்ணனின் வடிவில் கிறிஸ்துவைத்தான் கண்டிருக்க வேண்டும். அவனுக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்தியதை அவர் யாரிடமும் சொல்லவே இல்லை. என்ன வொரு தன்னலமற்ற அன்பு? இந்த அன்புதான் நாகராஜனை கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்திருக்குமோ?

ஸ்டீபன் கோவை மாவட்டத்தின் ஒர் உயரிய கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவன். அனைவராலும் வெறுக்கப்படக்கூடிய ஒரு மாணவனாய் இன்று மாறிவிட்டான். ஆனால், ஒருகாலத்தில் பட்டதாரிகள் அனைவராலும் வெகுவாய் பாராட்டப்பட்டவன். தன் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ஜெபக்குழு என்றால் பத்துப் பதினைந்து மாணவர்களை சுலபமாக கொண்டு வந்து சேர்த்துவிடுவான். நன்றாக இசைக்கருவிகளை வாசிப்பான். ஒரு முகாம் என்றால் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வான். ஒரு வலுவான மாணவத் தலைவன் என்றே அனைவராலும் அதிகமாய் பாராட்டப் பட்டான்.

இந்த பாராட்டு புகழ்ச்சியெல்லாம் வெகுநாட்கள் நிலைக்க வில்லை. ஒரு நாள் மாணவர்கள் பட்டதாரிகள் இடையே பரபரப்பான பேச்சு நிலவியது. என்னது? ஸ்டீபன் இப்படி செய்துவிட்டானா? இவனை யெல்லாம் சும்மாவே விடக்கூடாது! ஆமாண்ணே. இந்த மாதிரி பசங்கள எல்லாம் நம்ம ஊழியத்துல வச்சிருந்தோம்னா நம்ம ஊழியத்துக்குத்தான் அசிங்கம். உடனே அவனை விரட்டியடிக்க வேண்டும்!

நடந்தது என்னவென்றால். ஸ்டீபனுக்கும் ஒரு ஜெபக்குழு மாணவிக்கும் காதல் உறவு இருந்தது தெரியவந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட விளைவே இது. ஒருநாள் அனைவராலும் பாராட்டப்பட்டவன் இன்று அனைவராலும் வெறுக்கப்பட்டுவிட்டான். ஜெபக்குழுவுக்கும் மற் றும் எந்தவொரு கூடுகைக்கும் அவனை அனுமதிப்பதில்லை. இதனால், ஸ்டீபன் மிகவும் மன பாதிப்பு அடைந்திருந்தான். பழைய நினைவுகள் யாவும் அவனை நெருக்கி வதம் செய்ய ஆரம்பித்துவிட்டன. அவனிடம் யாரும் பேசவுமில்லை. ஃபோன் போட்டு விசாரிக்கவும் இல்லை. நாட்கள் சில கடந்தன.

டொக். டொக்! யாராச்சும் இருக்கீங்களா? ஸ்டீபன் கதவைத் திறந்தான். சாமுவேல் அண்ணன் 35 கிலோமீட்டர் தேடி அவனுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார்.

ஸ்டீபன்… மெல்லப் பேசினார் சாமுவேல் அண்ணன். அண்ணா… அது வந்து… என்று பதைபதைக்கும் குரலோடு பேசினான். ஸ்டீபன்.

ஸ்டீபன், நான் அந்த விஷயத்தை பேச வரல. உன்னை சந்திச்சு கொஞ்சம் நேரம் ஓங்கூடச் செலவிடலாம்னுதான் வந்தேன். கெளம்பி வா. ஒரு ரைடு போகலாம்.

தேசிய நெடுஞ்சாலையில் ஓர் அமைதியான டீக்கடை. ஆனால், ஸ்டீபனின் மனது மட்டும் அமைதி கொண்டிருக்கவில்லை.

ஸ்ட்ராங்கான டீயும் ரெண்டு பிஸ்கட்டுகளும் இருவருக்கு மிடையில் அன்பைப் பெருக்கியது. சாமுவேல் அண்ணன் ஒன்றுமே அவனிடம் கேட்கவில்லை. ஆனால், ஸ்டீபன் தன் மனதின் குமுறல் களையெல்லாம் ஒளிவு மறைவின்றி கொட்டிக் தீர்த்துவிட்டான். கொட் டியது மனக் குமுறல்கள் மட்டுமல்ல. அவன் கண்களின் கண்ணீரை யும்தான்.

சாமுவேல் அண்ணன் பெரிதாய் ஒன்றும் சொல்லவில்லை. ஸ்டீபன். நான் உன்னை புரிந்துகொள்கிறேன். நீ கொஞ்சம் டைம் எடுத்துக்கோ. என் வீட்ல வந்து தங்கி இரு. நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். உனக்கு தனியறை தருகிறேன். அங்கே நீயும் உன் ஆண்டவரும் மட்டும்தான். எல்லாம் விரைவில் சரியாகும்.

ஆச்சரியம் என்னவென்றால், விரைவில் ஸ்டீபன் மீண்டு வந் தான். அவனுக்கு தேவைப்பட்டது தன்னைப் புரிந்து கொள்ள ஒரு நபரும், அவன் சரியாக கொஞ்சம் நேரமும்தான். அதை சாமுவேல் அண்ணன் கொடுத்தார்.

சாமுவேல் அண்ணன். அவர் மிகவும் தாழ்மையுள்ளவர். வெட்டி பந்தா ஒன்றும் காட்டிக்கொள்வதில்லை. அவர் செய்யும் பணி யாருக்கும் பெரும்பாலும் தெரிவதில்லை. ஆனால். அவர் பணியின் விளைவுகளோ பெரும் கனிகள் மட்டுமே. ஏதோ ஒரு மாணவனுக்கு ஒரு தேவை என்றால் முதலில் வந்து நிற்பார். ஒரு தவறான செய்தியைக் கேள்விப்பட்டால் நியாயந்தீர்ப்பதில் மிகவும் தாமதம் கொள்வார். தன்னை பரிசுத்தவானாய் காட்டிக் கொண்டு மற்றவர்களின் குறைகளை ஊர் முழுக்க பேசித் திரிய மாட்டார். யாரையும் புரிந்துகொள்வதில் அவருக்கு ஒரு தனி இடமுண்டு. இப்படி எண்ணற்ற நிகழ்வுகளை எண்ணிக்கொண்டே போகலாம்.

இந்த சாமுவேல் அண்ணன் பணிமாறுதல் பெற்று மதுரை செல்கிறார். அதனால்தானே இத்தனை பெரிய மாணவர் கூட்டம் அவருக் காக அந்த தொடர்வண்டி நிலையத்தில் ஏக்கத்தோடு காத்திருக்கிறது.

அவர் ஏறிய தொடர்வண்டி மெதுவாய் ஹாரன் சத்தத்தை எழுப்பிப் புறப்பட்டு சென்றது. ஆனால். அவர் விதைத்த கிறிஸ்துவின் அன்பின் சாயல் மட்டும் கோயம்புத்தூரிலேயே தங்கிவிட்டது!

No Comments

Sorry, the comment form is closed at this time.