
18 Nov செயற்குழுத் தலைவன்
செயற்குழுத் தலைவன்
Committee என்பதற்குச் சரியான தமிழ் வார்த்தையைத் தேடியபோது கிடைத்தது செயற்குழு. Execu-tive Committee என்பது தான் நேரடியாக தமிழில் செயற்குழு. ஆனாலும் Executive இல்லாவிட்டிலும் Committee என்பதை செயற்குழுவாக மொழி மாற்றலாம். விஷயம் என்ன வென்றால் Committee என்றாலே செயல்பட வேண்டும். எனவேதான் அது ‘செயற்குழு’ எனவே இக்கட்டுரையில் செயற்குழு என்ற வார்த்தையையே பயன்படுத்தப் போகிறோம்.
UESI குறித்த வேடிக்கையாகச் சொல்லப் படுகிற ஒரு கருத்து. நாம் கமிட்டிகளைக் குறைக்க வேண்டுமானால் அதைக் குறித்தும் ஒரு கமிட்டி போடுவோம் என்பதுதான். இது உண்மைதான். தலைமைத்துவப் பகிர்வு (Shared Leadership) நமது அடிப்படை விழுமியங்களில் (Core values) ஒன்று. எனவே எல்லா முடிவுகளையும் ஒரு குழுவாகக் கூடி, சிந்தித்து, ஜெபித்து எடுப்பதை நமது இயக்கத்தின் கலாச்சாரமாகவே வைத்திருக்கிறோம். ஒரு சில சமயங்களில் முடிவெடுப்பதில் இது தாமதத் தைக் கொடுத்தாலும், இதைவிட சிறந்த முறை வேறு கிடையாது.
ஒரு சிலர் கமிட்டியைக் குறித்துப் பெரிதாக எண்ணுவதில்லை. கமிட்டியைக் கூட்டுவது நேர விரயம் என்பது அவர்களது எண்ணம். வேறு சிலர் கமிட்டிகளில் அதிக உற்சாகம் காட்டுவதில்லை. அவர்களுக்கு ஊழிய பாரமும் வாஞ்சையும் உண்டு. ஊழியத்தில் ஈடுபடுவார்கள். கமிட்டிகளுக்கு அழைத்தால் ஓடிவிடுவார்கள். கமிட்டிகளில் ஈடுபடுவதும் ஓர் ஊழியம் என்பதைக் குறித்த ஒரு சரியான புரிதல் அவர்களுக்கு இல்லை. கமிட்டிகளில் ஊழியங்களைக் குறித்து சிந்தித்து, விவாதித்து, முடிவெடுத்துச் செயல்படுத்துகிறோம். இவை ஊழிய வளர்ச்சிக்கு அடிப்படையானது என்பதை அவர்கள் அறிய வேண்டும்.
வேறு சிலருக்கு கமிட்டியில் இல்லாவிட்டால் திருப்தியாய் இருப் பதில்லை. கமிட்டியில் இருப்பதை சிலர் பெருமையாக எண்ணித் தங்கள் கருத்துகளைக் கொண்டு ஆதிக்கம் செலுத்துவது முற்றிலும் தவறு.
செயற்குழுவில் பங்கெடுக்கிறவர்கள் UESI ஊழியங்கள்தான் எனக்கு முன்னுரிமை’ என்கிற தீர்மானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஒருவேளை பற்பல ஊழியங்களில் ஈடுபாடு உள்ளவர்களாய் இருந்தாலும் UESI ஊழியங்களுக்கு முன்னுரிமை தந்து ஈடுபட வேண்டும்.
செயற்குழுக்களில் ஈடுபடுகிறவர்கள் மாணவர் ஊழியத்தில் நேரடித் தொடர்பு உள்ளவர்களாக. முக்கியமாக மாணவர்களை வழி நடத்துபவர்களாக (Mentor) இருக்க வேண்டும். இவர்கள்தான் மாணவர்களது தேவைகளை நன்கறிந்து சிறப்பான தீர்மானங்களை எடுக்க உதவுபவர்களாக இருக்க முடியும்.
செயற்குழுக் கூட்டங்கள் லௌகீகமானவை அல்ல, அவை ஆவிக்குரிய தன்மையுள்ளவைகள். நாம் எடுக்கும் தீர்மானங்களைச் செயல் படுத்தும்போது அவை நித்தியத்திற்கான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. எனவே செயற்குழு கூட்டங்களை ஆவிக்குரிய ஒன்றாகக் கருதி ஆயத்தமாக வேண்டும். தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் கூடி, முடிவெடுத்துச் செயல்படும்போது தேவனுடைய ஆவியானவரின் வல்ல செயல்பாட்டினைக் காண முடியும். விவாதப் பொருட்களை (Agenda) ஆயத்தம் செய்வது மட்டுமல்ல, உறுப்பினர்களும் ஆவிக்குரிய ஆயத்தம் செய்யவேண்டும்.
இக்கட்டுரையின் முதல் பத்தியில் கண்டபடி கமிட்டி என்றாலே செயற்குழுதான். நம் விவாதம். தீர்மானங்களுடன் நின்றுவிடக் கூடாது. செயல்படாத குழு செயற்குழு அல்ல. உறுப்பினர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை ஒருவருக்கொருவர் நினைவூட்டி உதவிசெய்து நிறைவேற்ற வேண்டும்.
செயற்குழு உறுப்பினர்கள் செயற்குழு கூட்டங்களுக்கு சரியான நேரத்திற்கு வருவது தற்போது அரிதான விஷயமாகிவிட்டது. தாமதமாக வருவதும் கூட்டம் முடியும் முன் சென்றுவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இது ஈடுபாடின்மையைக் காட்டுகிறது. ஒருசிலர் மிக சாதாரணமான காரணங்களைக் காட்டி செயற்குழுக்களில் கலந்துகொள்வதில்லை. உள்ளூர் செயற்குழுவோ, தேசிய செயற்குழுவோ எதுவாயினும் ஒரேவித ஈடுபாட்டுடன் கலந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இது ராஜரீக ஊழியம் சார்ந்த செயல்பாடு.
கமிட்டியின் அழகே அதன் பன்மைத்துவம்தான். நாம் அனை வரும் தேவனால் வித்தியாசமானவர்களாக (Unique) படைக்கப் பட்டவர்கள். அப்படிப்பட்டவர்கள் ஒன்றுகூடும்போது பலதரப்பட்ட கருத்துக் கள் முன்வைக்கப்படும். சில நேரங்கள் உறுப்பினர் ஒருவருக்கு உடன் பாடில்லாத கருத்துகளும் வரலாம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பது இயற்கையானது. நல்லதுதான். ஆனால் அது முடிவெடுப்பதற்கு தடையாக இருக்கக்கூடாது. உறுப்பினர்கள் மாற்றுக் கருத்துக்களை ஏற்க முடியாத வர்களாய், இணக்கமில்லாதவர்களாய் இருக்கக்கூடாது. தேவனால் மீட்கப்பட்ட, தேவ ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்களால் தேவ ஆவியானவர் உதவியோடு ஒருமித்த கருத்தை எட்ட முடியும். இணக் கமும், பொறுமையும். விட்டுக்கொடுத்தலும் மிகவும் அவசியம். 1 கொரிந் தியர் 12ஆம் அதிகாரத்தில் கண்டுள்ளபடி பல்வேறு தாலந்துகளும் வரங்களும் உடையவர்கள் ஒரே சரீரத்தின் அங்கத்தினர்கள். எபேசியர் 4:11-13 வசனங்களில் கண்டுள்ளபடி பக்தி விருத்தியும். சபையானது கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியில் பூரணமாகுதலும் ஆகிய ஒருமித்த குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்.
செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஒருவரும் தங்களுக்குப் பங்கு இல்லை (Disown) என எண்ணக்கூடாது. முடிவுகள் எடுக்கப்பட்டபின்பு அவைகளுக்கு உறுப்பினர் அனைவரும் கூட்டு உரிமையாளர்கள். அவை எவ்வித விளைவுகளை உருவாக்கினாலும் முழு செயற்குழுவும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும்.
பொதுவாகத் தலைமைத்துவம் என்பது அதிகார மையம் என்றே உலகம் முழுவதும் பரவலாகக் கருதப்படுகிறது. இதே கருத்து ஆவிக்குரிய இயக்கங்களிலும் காணப்படுவது கவலை தரும் ஒன்று. செயற்குழுவில் தலைமைத்துவம் எடுக்கிற ஒரு சிலரும் வெளியே இருக்கிற இயக்க உறுப்பினர் ஒரு சிலரும் இப்படியே கருத்துகிறார்கள். ஆனால், வேதாகமம் போதிக்கும் தலைமைத்துவம் ஊழியக்காரத்துவம் (Serventhood) ஆகும். இயேசு கிறிஸ்துவே தம் சீடரின் கால்களைக் கழுவி நீங்களும் ஒரு வருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள் என்று அறிவுறுத்தி உள்ளார் (யோவான் 3:14). முக்கியமாக தலைமைத்துவப் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
தலைமைத்துவத்தின் ஒரு தவிர்க்க முடியாத அங்கம் தியாகம். பொதுவாக தியாகம் இல்லாவிடில் ஊழியம் இல்லை. பொறுப்புகளை நிறைவேற்ற தியாகம் செய்யத் தயங்காதவர்கள் செயற்குழுவில் பங்கேற்க வேண்டும். பொறுப்புகளோடு இணைந்துள்ள பணிகள். பயணங்கள். பொருட்செலவு, உடற்சோர்வு, குடும்பத்தை விட்டு வெளியே இருக்கும் கடமை போன்று பல்வேறு இடையூறுகளை அனுபவிக்க நேரிடும். இதனை நிர்ப்பந்தத்தினால் அல்ல; மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.
நாம் மேலே வாசித்தபடி செயற்குழுவில் ஈடுபடுவது வேதாக மத்தைப் போதிப்பதற்கும். நற்செய்தியைப் பரப்புவதற்கும் இணையான ஊழியம். அபாத்திரரான நமக்கு தேவன் இக்கனமான ஊழியத்தைச் செய்ய பொறுப்பளித்திருக்கிறார். இது தேவன் அருளிய சிலாக்கியம். எனவே. நாம் மறுப்புச் சொல்லாமல், அலட்சியம் காட்டாமல் தீவிரமாக ஈடுபட்டு தேவராஜ்ஜியப் பணிகளில் முனைப்புடன் செயல்படுவோம். மாணவர்களுக்கும் இளம் பட்டதாரிகளுக்கும் கற்றுக்கொடுப்போம்: நம் தலைமைத்துவத்தை உத்தமத்துடன் நிறைவேற்றுவோம்.
நம் இயக்கத்திற்கு தேவன் உண்மையுள்ள தலைவர்களை தலை முறைதோறும் இதுகாறும் தந்துவருகிறார். வருங்காலமும் அப்படிப்பட்ட தலைமைத்துவத்தை நம் இயக்கம் காணட்டும்.
No Comments