வில்லியம் கேமரூன் டெளன்சென்ட்

அறிமுகம்ஒவ்வொரு அருட்பணி இயக்கத்தின் ஆரம்பத்திற்கும் வலுவான ஒரு பின்னணியிருக்கும்.
“உங்கள் தெய்வம் பேசும் தெய்வம் என்றால் அவர் ஏன் எங்கள் தாய்மொழியில் பேசக்கூடாது?” என்னும் அழுத்தமான கேள்வி பல மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் ஒரு பெரிய மொழிபெயர்ப்பு இயக்கம் தோன்றக் காரணமாயிற்று.
1896ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் பிறந்த கேமரூன் கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும்போது மாணவர் தன்னார்வலர் இயக்கத்தினரின் (Student Volunteer Movement) அறிமுகம் ஏற்பட்டது. இவ்வியக்கத்தின் ஆரம்பகால ஊழியரான ஜான் மாட் என்பவர் இவரது கல்லூரிக்கு வந்தபோது மாணவர்களை அகில உலகமெங்கும் நற்செய்தியைச் சுமந்துசெல்லும் பணிக்கு அர்ப்பணிக்கும்படி உற்சாகப்படுத்தினார்.

SVM இயக்கத்தில் இணைந்து அருட்பணிக்குத் தன்னை அர்ப்பணித்த கேமரூன், தன் நாட்டின் போரில் பங்குபெறும்படி 1917ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புப் படையில் இணைந்தார். இதனிடையே முழுநேரப் பணியாளர் ஒருவர் தன் விடுமுறையின்போது, ஊழியத்தின் தேவைகளைப் பகிர்ந்துகொண்டபோது கேமரூன் தன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, போர்க்களத்திற்குப் பதில் அருட்பணித்தளத்திற்குச் செல்லத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.
வேதாகம நிறுவனம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொண்டு 1917ஆம் ஆண்டு கவுத்தமாலா என்ற பகுதிக்கு ஸ்பானிய வேதாகமங்களை வழங்கும்படி சென்றார். ஓராண்டு காலம் அங்கு பணிசெய்து முடித்துத் திரும்ப வேண்டிய நிலையில், ஒருநாள் கேமரூன் முன் வைக்கப்பட்டிருந்த வேதாகமங்களைச் சுட்டிக்காட்டிய கவுத்தமாலா பகுதியில் வசித்த பழங்குடி இனத்தவர் ஒருவர் (Cakchiquel Indians) அவ்வேதாகமங்களை என்னவென்று வினவினார்.
கேமரூன் அவரிடம்: இவ்வுலகத்தைப் படைத்தவர். தான் படைத்த மனிதனுடன் பேசும் வார்த்தைகள் இவைகள் எனப் பதிலளிக்க, அம்மனிதன் “உங்கள் தெய்வம் பேசும் தெய்வம் என்றால் அவர் ஏன் எங்கள் தாய்மொழியில் பேசக்கூடாது?” என வினவினார்.
அவரது கேள்வி கேமரூனைச் சிந்திக்க வைத்தது. தாம் வாழும் கவுத்தமாலா பகுதியில் ஸ்பானிய மொழி பேசத் தெரியாத பல மக்கள் இருப்பதை உணர்ந்து கொண்டார். இவ்வினத்தைப் போன்று பலரும் தங்களுடைய மொழியில் வேதாகமம் கிடைக்கப்பெறாதவர்கள் என்னும் உண்மை கேமரூனின் உள்ளத்தில் சவாலை ஏற்படுத்தியது. தன்னுடைய ஓராண்டு ஊழியம் நிறைவுற்றபோதும் தாம் அருட்பணி செய்த இடத்தை விட்டுச் செல்லவில்லை.

அடுத்த பதிமூன்று ஆண்டுகள் Cakchiquel Indians மக்களிடையே தங்கியிருந்து பத்து ஆண்டுகள் அயராது முயற்சி செய்து, அவ்வினத்தவரின் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்தார். பிற இன மக்களின் தாய்மொழியிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்னும் தரிசனத்துடன் விஃக்ளிப் வேதாகம் மொழிபெயர்ப்பு (Wycliff Bible Translators) என்னும் அமைப்பினை உருவாக்கினார்.

மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கவும், அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கவும் மொழியியல் பயிற்சி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். அனைத்துக் கலாச்சார மக்களினத்தையும் குறைவாகக் கருதாமல், அவர்கள் மொழி எவ்விதக் கடுமையாக இருப்பினும், மொழிபெயர்ப்புப் பணிக்குத் தம்மை அர்ப்பணிப்பவர்களுக்குத் தகுந்த பயிற்சியளித்து, அவர்கள் மொழிபெயர்க்கும் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிக்கு மொழிபெயர்ப்பாளர்கள் சென்று அங்கு தங்கியிருந்து மொழிபெயர்ப்புப் பணி நடைபெறும்.

அப்பகுதியின் அரசாங்கம் மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவியுடன் இந்த உன்னதப் பணி நடைபெறும். கேமரூனின் ஆரம்ப முயற்சியினாலும் பிறருக்கு அவர் அளித்த ஊக்கத்தினாலும் இன்று அறியப்படாத பல மக்களினத்தின் தாய்மொழியில் வேதாகமமும் வேதாகமத்தின் சில பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இன்னும் பல மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளது. 1982ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை விட்டு மறுமைக்குள் பிரவேசித்த கேமரூனின் உன்னதப்பணி அவர் விட்டுச்சென்ற அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது.

“The greatest missionary is the Bible
in the mother tongue.
It needs no furlough and is
never considered a foreigner”

என்னும் கேமரூனின் வார்த்தைகள் முற்றிலும் உண்மையானவை. நம் தாய்மொழியில் நம் கைகளில் தவழும் வேதாகமத்திற்காக நன்றி சொல்லுவோம். வேதாகமம் கிடைக்கப்பெறாத மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட ஜெபிப்போம். கர்த்தர் இதற்குரிய புத்தியையும் உத்தியையும் கொடுத்திருப்பாரானால் இவ்வுன்னதப் பணி செய்ய அர்ப்பணிப்போம்.

No Comments

Post A Comment
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.