who-will-free-me

யார் என்னை விடுதலையாக்குவார்?

மெய்சிலிர்க்க வைக்கும் தொழில்நுட்ப அதிசயங்கள்! அறிவியல் உலகின் அபார வளர்ச்சிகள்! மருத்துவத் துறையின் மகத்தான மைல் கற்கள்! கண்ணிமைக்கும் வினாடிகளில் தகவல்களை அள்ளிக் கொட்டும் இன்டர்நெட் வசதி, மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியன இந்தத் தலைமுறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இந்த அதிநவீன உலகில் வாழ்வது எனக்குக் கிடைத்த பாக்கியம். அதிகரிக்கும் ஆயுள்காலம், வசந்தம் அலங்கரிக்கும் வாழ்க்கைத் தரம், அடிப்படை உரிமைகளோடு கண்ணியம், கெளரவத்துடன் வாழ்வதற்கு ஆதரவுக் கரங்கள் நீட்டும் அமைப்புகள். முடிவு இல்லாத இந்தப் பட்டியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

காலையில் எழுந்தவுடன் நமது வீடுகளின் வாசல்களில் நம்மை வரவேற்று காலை வணக்கம் செய்பவை பால் பையும் நாளிதழ்களும். ஏடிஎம் மையத்தில் காவலாளி கொலை, சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது, கற்பழிப்பு, வழிப்பறி, கொலை, கொள்ளை இந்தச் சோக நிகழ்வுகளைச் சித்தரிக்கும் செய்திகளுக்குப் பஞ்சம் கிடையாது. எரிச்சல், கோபம், கனத்த இருதயம் ஆகிய இந்தக் கசப்பான அனுபவங்களோடு ஒரு புதிய நாளின் காலச் சக்கரம் நகர்கிறது.

ஒரு பக்கம் நவநாகரிகத்தின் வியக்கத்தகும் வளர்ச்சிகள், இன்னொரு பக்கம் அழிவையும் அக்கிரமத்தையும், அநியாயத்தையும், அறியாததையும் நோக்கித் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கும் புதுயுகத்தின் புதுமைப் புத்திரர்கள். இந்த முரண்பாடுகளைக் கவனிக்கும்பொழுது எனக்குள்ளாக எழும் கேள்வி நவநாகரீக சமுதாயமே, முரண்பாடு என்பது உன்னுடைய இன்னொரு பெயரோ? (Paradox! Thy name is modern man!) என்பதுதான்.

சுதந்திரக் காற்றைச் சுவாசித்து, பட்டங்கள், பதவிகள் என்ற அடையாளங்களோடு உலாவி வரும் இன்றைய மனிதன் உண்மையிலே அடிமையாகவே வாழ்கிறான். மனிதன் பிறக்கும் பொழுது சுதந்திரமாகப் பிறக்கிறான்; ஆனால் அவன் வளரும்பொழுது அடிமையாக மாறுகிறான் என்றார் பிரான்சு தேசத்தின் தத்துவ ஞானி ஒருவர். (Man is born free but in chains every where). அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக விடுதலை பெற்றவன். ஆனாலும் அவனுக்குள் அடிமைத்தனம், போராட்டம், குழப்பம் வதைத்துக் கொண்டிருக்கிறது. சராசரி மனிதனின் இதயம் ஏங்கிக்கொண்டிருக்கும் எல்லா வசதிகளும், வாய்ப்புகளும் வளமாய்ப் பெற்றாலும் நிறைவுள்ள வாழ்வு நிராசையாகி கானல் நீர் போல மாயப் பிம்பம் ஆகிவிட்டது. கல்லூரிகளிலும் பல்கலைக்கழக வளாகங்களில் உலாவி வரும் இளைஞர் பட்டாளத்தின் இதயத் துடிப்பு “யார் என்னை விடுதலையாக்குவார்?“ என்பதே. எதிர்காலத்தைக் குறித்த ஏக்கங்கள், அந்தரங்க வாழ்க்கையில் அலைக்கழிக்கும் நெருடல்கள், வாட்டிவதைக்கும் குற்ற உணர்வுகள்; யார் என்னை விடுதலையாக்குவார்?

பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கையின் ஆசிரியர் ஒருவர் அவருடைய எழுத்து வளத்தின் மூலமும் நகைச்சுவை மூலமும் ஆயிரக்கணக்கான விசிறிகளை வசீகரப்படுத்திக்கொண்டார். நல்ல சிந்தனைச் சிற்பி. ஒரு முறை ஒரு பட்டணத்தைப் பற்றிச் சிறப்புக் கட்டுரை எழுதுவதற்காகப் புறப்பட்டுச் சென்றார். நட்சத்திர விடுதியில் அறை எடுத்துப் பட்டணத்தைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கினார். அந்த நகரத்தின் வழியாகச் செல்லுகிற நதியில் நீந்திக் குளிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒருநாள் அதிகாலையில் நதியில் இறங்கி ஆனந்தமாய்க் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, அருகாமையில் தனிமையில் நீராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டார். ஒருசில வினாடிகளிலேயே அவருக்குள்ளாகத் துயில் கொண்டிருந்த மிருக உணர்வு அவரை ஆட்கொண்டது. சபலத்துக்குத் தன்னை விற்றுப்போட்ட இந்த நாகரீக எழுத்தாளர், அந்தப் பெண்ணை நோக்கி விரைவாக நீந்திச் சென்றார். அருகில் சென்ற அவர் அவளைப் பார்த்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி மிக வேகமாகத் தான் இருந்த இடத்திற்கு வந்து விட்டார். அந்தப் பெண் வெளிச்சம் வருவதற்கு முன்பு, தன் உடம்பு முழுவதும் பரவியிருந்த குஷ்டரோகப் புண்களைக் கழுவிக்கொண்டிருந்தாள். அவருக்குள்ளாகக் குடிகொண்டிருக்கும் இந்த மிருக உணர்வுகளின் பயங்கரத்தை நினைத்து வெட்கத்துடன் விடுதிக்குத் திரும்பினார். தன்னுடைய டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் “இன்று காலையில் நான் சந்தித்த பிரச்சனைக்குக் காரணம் அந்த குஷ்டரோகப் பெண் கிடையாது; எனக்குள்ளாக இருக்கும் குஷ்டரோக இருதயம்“. “My problem in the morning is not the leperous woman but my leperous heart” (Source: Editor, ‘Punch Magazine).

மனித இருதயத்தின் பொல்லாத தன்மையை இயேசு கிறிஸ்துவானவர் அழகாகச் சித்தரிக்கிறார்: “… மனுஷனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித் தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், காமவிகாரமும், வன் கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும் (மாற்கு 7:21-22). இந்த திருக்குள்ளதும், மகாக் கேடுள்ளதுமாய் இருக்கிற இருதயத்தை மேற்கொள்வது எப்படி? ஆன்மீக ஈடுபாடும், ஆழ்நிலைத் தியானமும் தீர்வைக் கொடுக்க முடியவில்லை. யார் என்னை விடுதலையாக்குவார்?

பைபிள் இவ்விதமாக சொல்லுகிறது. ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான் (2 கொரி.5:17). புதுச் சிருஷ்டிக்குள்ளாக எல்லா அவயவங்களும் மாற்றம் பெறுகின்றன. கிறிஸ்து நாதர் ஒரு மனிதனை ஆட்கொள்ளும்போது ஏற்படுகிற ஆன்மீகப் புரட்சி இந்த மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

பயம், பாவம் என்ற பாரங்களோடு திணறும் மனிதனுக்குப் புதிய மதக் கோட்பாடுகளை அறிமுகம் செய்வதற்காக இயேசு நாதர் இப்புவியில் அவதரிக்கவில்லை; மருத்துவத் துறையில் மகத்தான மாற்று மருந்தை அறிமுகப்படுத்த வரவில்லை. மாறாக, மனித வாழ்வில் அடித்தளத்தில் ஆழமான மாற்றங்களை உண்டுபண்ணுவதற்காக, பாவத்திலிருந்து காப்பாற்ற மனித குமாரனாக வந்தார் இயேசுக் கிறிஸ்து. “குமாரன் (இயேசு கிறிஸ்து) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்”. விவிலியம் பறைசாற்றும் மாறாத இந்தச் சத்தியம் அநேகரது வாழ்க்கையின் விடுதலை பெற்ற அனுபவம்.

பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத பிரச்சனைகள், மனதிற்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்கள், தூக்கத்தையும், நிம்மதியையும் திருடும் குற்ற உணர்வுகள் தரும் பாவத்தின் தோஷத்தையும், சாபத்தையும் நீக்கி வாழ்வில் வசந்தம் துளிர்க்க இயேசு என்ற திருநாமம் தாங்கிய சொந்த இரட்சகர் உன்னை அழைக்கிறார்.

பாலிவுட் உலகின் முன்னணி நட்சத்திரங்களில் முதல் இடத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஒருவர் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் மேடையில் மைக்கைப் பிடித்துக்கொண்டு பேசும்போது வெட்கப்படாமல் குறிப்பிட்ட வார்த்தைகள் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “உயர்ந்த இடத்தில் இருக்கிற நான் தனிமையை உணர்கிறேன். வெகுநாட்களாக வெறுமை என்னும் உணர்வோடு போராடிக்கொண்டிருக்கிறேன். எனக்குள்ளே ஏதோ தவறு இருக்கிறது. என்னால் உணர முடிகிறது; ஆனால் என்னவென்று சொல்ல முடியவில்லை”. “I am lonley at the top. I am constantly fighting with the feeling of emptiness. There is something wrong in me. I feel it but I dont know what it is”, (Source: ‘Think Fest Conclave’ Times of India, 5th Nov 2012).

விஞ்ஞானிகள், தத்துவ மேதைகள், நட்சத்திர விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் ஆகிய எல்லோரும் அனுபவிக்கும் தனிமை உணர்வு. தவறான இடங்களிலும், நபர்களிடமும் பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தேடும் பரிதாப நிலை. உன்னுடைய போராட்டங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வைக் காண பல இடங்களுக்குச் சென்றாய், புண்ணிய ஸ்தலங்கள், மகான்கள், விரதங்கள், நட்புகள், மது, சினிமா எல்லாவற்றையும் முயற்சி செய்துவிட்டாய். முடிவு? விரக்தி, ஏமாற்றம். மறுபடியும் வெறுமை!

நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவுமே வந்தேன்” என்று கூறி அழைக்கிற உன் பாவங்களுக்காக மரித்துயிர்த்த இரட்சகரின் நேசக் குரல் உன் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இரட்சகர் இயேசு நாதருக்கு வாய்ப்புக் கொடுக்கலாமே! Consider Jesus Christ! 

1 Comment
  • Vivek .S
    Posted at 03:32h, 18 August Reply

    Very nice and heart touched ❤️♥️

Post A Comment
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.